Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களை மாற்ற புதிய திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள், 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் தினசரி 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் 85 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 800 மில்லியன் லிட்டர் அளவிலான கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இதுவரை 140 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

பருவமழைக் காலத்துக்கு முன்னதாகவே கழிவுநீர்க் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும்பொருட்டு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர்க் குழாய்களில் தீவிர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட குழாய்கள், பழுதடையக்கூடிய நிலையில் உள்ள குழாய்களை மாற்றி புதியகுழாய்கள் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பருவமழைக்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையவும் புகார்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கவும், வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.விஜயராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x