Published : 20 Oct 2021 06:09 PM
Last Updated : 20 Oct 2021 06:09 PM

'தமிழகம் உலக நாகரிகத்தின் தொட்டில்'- திருப்பத்தூர் அருகே சங்க காலத் தொல்லியல் சான்றுகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே சங்க காலத் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி தலைமையில் தொல்லியல் அறிஞர் வெங்கடேசன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முனிசாமி, குனிச்சி பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் அருகே கள ஆய்வு மேற்கொண்ட போது சங்க கால வாழ்விடம் இருந்தற்கான தொல்லியல் சான்றுகளைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்துத் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி கூறியதாவது:

’’திருப்பத்தூர் - சிங்காரபேட்டை பிரதான சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அனேரி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தில் கள ஆய்வு நடத்தினோம். விவசாய உழவுப்பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்ட போது நிலத்தில் தொடர்ச்சியாக கருப்பு, சிவப்பு வண்ணத்திலான பானை ஓடுகள் அதிக அளவில் இருப்பது காண முடிந்தது.

கீழடி உள்ளிட்ட இடங்களில் இது போன்ற கருப்பு, சிவப்பு வண்ணத்தில் பானை ஓடுகளை ஏராளமாகக் கண்டறிந்து அதன் பிறகே அங்கு அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் நெடும் பரப்பில் கீழடி சிறந்த தொல்லியல் ஆய்வு இடம் என்றாலும், கொடுமணல், ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகன் குளம் போன்ற ஏராளமான இடங்கள் மாநிலம் முழுவதும் பல தொல்லியல் சான்றுகளைக் கொண்டுள்ளன.

1964- 65ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பைனம்பள்ளி என்ற இடத்தில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்களைத் தொல்லியல் ஆய்வு மெய்ப்பித்துள்ளது. அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்திலும் தொல்லியல் தடயங்கள் தன்னகத்தே கொண்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொதுவாக சங்க கால வாழ்விடங்கள் நீர்நிலைகள் சார்ந்த பகுதிகளிலேயே கட்டமைப்பட்டன. அனேரி கிராமத்தையும் அகழிபோல நீரோடை ஒன்று சூழ்ந்துள்ளது. ஏலகிரி மலையில் உள்ள ஜலகம்பாறை உள்ளிட்ட நீர்நிலைகள் திருப்பத்தூர் பெரிய ஏரியில் கலக்கின்றன.

திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் அனேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று ஊத்தங்கரை பாம்பாறு அணைக்குச் சென்றடைகிறது. எனவே, சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான நீர்நிலை சூழ்ந்த ஊராக அனேரி கிராமம் உள்ளது. இந்த ஊரில் சங்ககால மக்கள் வாழ்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளதை எங்கள் கள ஆய்வு மூலம் கண்டுணர்ந்துள்ளோம்.

அனேரி நிலப்பகுதியில் கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட பானை ஓடுகள் மட்டும் அல்லாமல், உடைந்த நிலையில் முழுமையான நிலையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்களும், மண்ணில் பல ஆண்டுகளாக புதைந்துள்ளன. இந்த செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் சங்க கால மக்கள் குடியிருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இரும்பை உருக்கி வார்த்ததற்கான அடையாளமாக இரும்பு கசடுகள் (சிட்டாங் கற்கள்), பலவற்றை இந்த ஊரில் கண்டெடுத்துள்ளோம்.

இவை அனைத்தும் சங்க காலத்தைச் சேர்ந்த பொருட்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, இந்த ஊரில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் பல வரலாற்றுச்சிறப்பு மிக்க செய்திகள் தெரியவரும். தமிழகம் முழுவதும் தொல்லியல் தடயங்கள் காணப்படுவதால் தமிழகம் உலக நாகரிகத்தின் தொட்டில்போல் காட்சியளிக்கிறது.’’

இவ்வாறு பேராசிரியர் மோகன்காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x