Published : 20 Oct 2021 12:13 PM
Last Updated : 20 Oct 2021 12:13 PM

வேளாண் சட்டங்கள், வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவுக்கு எதிர்ப்பு: மதிமுக கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கோப்புப்படம்

சென்னை

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (அக். 20), சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"தீர்மானம் எண்: 1

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் திமுக அரசுக்கு நற்சான்று அளித்து இருக்கின்ற 9 மாவட்ட மக்களுக்கு, மதிமுகவின் சார்பில் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பொற்கால நல்லாட்சி தொடருவதற்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

தீர்மானம் எண்: 2

'பம்பரம்' சின்னத்தில் வெற்றி வாகை சூடிய மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிமுகவினருக்கும், இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் எண்: 3

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாவட்டக்குழு உறுப்பினரும், 13 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் மதிமுகவின் சார்பில் 'பம்பரம்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

குருவிகுளம் ஒன்றியத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்கள் எட்டு பேரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தை மதிமுக கைப்பற்றுவதற்கு வியூகம் அமைத்து, தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொண்டு, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டு வெற்றி வாகை சூட காரணமாக இருந்த துரை வைகோவுக்கும், துணை நின்ற தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் தி.மு.ராசேந்திரன் மற்றும் பசி நோக்காமல், கண் துஞ்சாமல் கடமையாற்றிய மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துத் கொள்வதில் பெருமிதம் அடைகின்றது.

தீர்மானம் எண்: 4

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாவட்டக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓர் ஒன்றியக்குழு உறுப்பினரும் வெற்றி பெறுவதற்குக் களப்பணி ஆற்றிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டப் பொறுப்பாளர்கள் மா.வை.மகேந்திரன், இ.வளையாபதி, ஊனை ஆர்.இ.பார்த்திபன் ஆகியோருக்கும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒரு ஒன்றியக்குழு உறுப்பினர் வெற்றி பெற பாடுபட்ட மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பாபு. கோவிந்தராஜன், க. ஜெய்சங்கர் மற்றும் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றது.

தீர்மானம் எண்: 5

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, அமைதியாகப் போராடிக் கொண்டு இருந்த விவசாயிகள் மீது தனது காரை ஏற்றி நான்கு விவசாயிகளைப் படுகொலை செய்து இருக்கின்றார்.

இத்தகைய கொடூரச் செயல்களைக் கண்டிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கின்றார். விவசாயிகள் மீது கொலை வெறி வன்முறைகளை ஏவுவதற்குக் காரணமாக இருக்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கும், ஆர்எஸ்எஸ், சங் பரிவார் வன்முறைக் கூட்டத்துக்கும் மதிமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கொலைக் குற்றவாளிகளைச் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்; பாஜக அரசு மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண்: 6

கிராம சபைக்கு வழங்கப்பட்டு இருக்கும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வனப் பாதுகாப்புச் சட்ட முன் வரைவை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், இச்சட்டத் திருத்தத்துக்கு எதிராக வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண்: 7

தமிழக மக்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்து வரும் பாசிச பாஜக அரசு, இனப் படுகொலை நடத்திய இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதையும் நிதி உதவி மற்றும் கூட்டுப் படைப் பயிற்சி நடத்துவதையும் மதிமுக கடுமையாகக் கண்டிக்கின்றது. மத்திய பாஜக அரசு தமிழக மக்களின் உணர்வுகளுடன் உரசிப் பார்க்க வேண்டாம்; உடனடியாக இத்தகைய முயற்சிகளைக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண்: 8

புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைத்திட ஆணையிட்ட, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் எண்: 9

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, டிசம்பர் மாதத்துக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. எனவே, மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உடனடியாக மாநகர் பகுதிக் கழக, பேரூர்க் கழக, நகரக் கழகக் கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்திடத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சியில் மதிமுக போட்டியிடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்து, பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண்: 10

இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இதுபோன்ற தொடர் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது".

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x