Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM

பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்தில் பயன்பெற மாநகராட்சி மண்டப திருமணங்களையும் தகுதியானதாக ஏற்க வேண்டும்: ஆடம்பர நிகழ்வாக கருதக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களை பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்துக்கு தகுதியானதாக ஏற்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நிலவுற்ற திருமணங்களை நடத்தி வைப்பதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில் (குடும்ப ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல்) உள்ளவர்களுக்கு உதவிடும் பொருட்டு படித்த பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டத்தை அரசின் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, 10 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம், பட்டம் அல்லது பட்டயப் படிப்பை முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வசதி வாய்ப்புள்ளவர்களே அதிக அளவில் விண்ணப்பிப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விதிகளை சமூக நலத்துறை கடுமையாக்கியுள்ளது. அது தொடர்பாக அனைத்து மாவட்ட சமூகநல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி தொகை கோரி விண்ணப்பித்திருப்பது கள ஆய்வில் தெரியவரும் பட்சத்தில் மனுதாரரின் விண்ணப்பத்தை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கடந்த 3 ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்களில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி, மாநில அளவில் 3 லட்சத்து 34 ஆயிரம் தகுதியான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அரசின் புதிய நிபந்தனை, சென்னை மாநகர பயனாளிகள் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசின் அறிவுறுத்தலை மாநகராட்சி பின்பற்றுகிறது. அந்த விதியை மாநகராட்சி உருவாக்கவில்லை" என்றனர்.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

பெண்ணின் பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்தாலும், திருமணத்தை மாப்பிள்ளை வீட்டார் தான் நடத்துகின்றனர். வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு என்பதால் அவர்கள் கடன் வாங்கி திருமணத்தை நடத்துகின்றனர். மேலும் சென்னை மாநகராட்சியில் 66 திருமண மண்டபங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான மண்டபங்களின் ஒரு நாள் வாடகை ரூ.590 முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளன.

மாநகராட்சி மண்டபங்களில் சமையல் பாத்திரங்களுக்கான வாடகை வசூலிக்கப்படுவதில்லை. வாடகையும் குறைவாக உள்ளது. அதனால் பலர் மாநகராட்சி திருமண மண்டபங்களில் திருமணம் செய்ய விரும்புகின்றனர். இவற்றை எல்லாம் ஆடம்பர திருமணமாக கருதக்கூடாது. இதுபோன்ற திருமணங்களை ஏற்று, திருமண நிதியுதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்

இது குறித்து சமூகநலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இவ்விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x