Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி தீபாவளியன்று பட்டாசு வெடிக்க ஆதரவு தாருங்கள்: அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அண்ணாமலை கடிதம்

சென்னை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி, தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசு உற்பத்தியிலும், 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசு விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரம்

இத்தொழில் தமிழக தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகும். இந்தியாவின் 90 சதவீதபட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் பட்டாசு வெடிக்கும் பழக்கம் உள்ளது.

கரோனா பாதிப்பில் மக்கள் துயருற்ற நிலையில், தன் நாட்டுமக்கள் சோர்வில் இருந்து மீளஜப்பான் நாடு சமீபத்தில் நாடெங்கும் பட்டாசுத் திருவிழாவை நடத்தி, மக்களுக்கு உற்சாகம் அளித்தது.

மிக விரைவில் வரவுள்ள தீபாவளி, தேசம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாகும்.

கரோனா பாதிப்பில் இருந்து தேசம் மீண்டெழும் நிலையில், பாதிப்பு மனநிலையில் இருந்துமக்களை மீட்டெடுத்து உற்சாகத்தை அளிக்கவும், நம் பாரம்பரிய வழக்கத்தின்படி தங்கள் மாநிலத்தில் பெரும்பான்மையான மக்கள் பட்டாசு வெடித்து மகிழவும் இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி, மக்கள் தீபாவளியன்று பட்டாசு வெடித்து மகிழ ஆதரவளிக்க வேண்டும்.

தீப ஒளி ஏற்றுங்கள்

தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வணிகர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை தமிழகமுதல்வர் ஸ்டாலின், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கேரள முதல்வர் பினராயிவிஜயன் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அண்ணாமலை அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x