Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

தமிழகத்தை ஆளும் நிலைக்கு முன்னேற்ற நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானம்

கோப்புப் படம்

சென்னை

தமிழகத்தை ஆட்சி செய்யும் நிலைக்கு பாமகவை முன்னேற்ற கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிறப்புபொதுக்குழு கூட்டத்தில் அரசியல்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்றார்.

பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமாஉட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பாமகவின்பல்வேறு அணிகளின் அனைத்துநிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்:

பாமக சார்பில் கடந்த 19 ஆண்டுகளாக தயாரித்து, மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும்நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்களில்50 சதவீதத்தை செயல்படுத்தி இருந்தால்கூட தமிழகம் அதிவேகவளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போட்டிருக்கும்.

நிழல் நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்காக இன்னும் ஏராளமான யோசனைகளையும், செயல்திட்டங்களையும் பாமக தயாரித்துவைத்துள்ளது. அவை செயல்படுத்தப்பட்டால் சிங்கப்பூர், ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போட்டி போட்டு தமிழகம் வளர்வதை உறுதி செய்ய முடியும்.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாமகவை வலிமைப் படுத்துவது தான் முதன்மையான பணி என்று இந்த பொதுக்குழு கருதுகிறது. அதற்காக பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கடுமையாக உழைப்பதற்காகவும் இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.

தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பாமகவை வலுப்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களை செயல்படுத்துவதற்காக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் காட்டும் வழியில் கடுமையாக உழைக்க பாமக சிறப்பு பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது.

மாநில பதவி ரத்து

தமிழகத்தில் பாமகவை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது.

அதன்படி, பாமகவின் விதி எண் 10-ல் திருத்தம் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மாநில துணைப்பொதுச் செயலாளர் பதவி கைவிடப்படுகிறது. இனி கட்சி ரீதியிலானமாவட்ட அமைப்பு மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ்இயங்கும். இந்த ஒரு மாற்றம் தவிரமாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு முன்பு இருந்த நிலையிலேயே தொடரும்.

இந்த மாற்றத்தின்படி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். அதுவரை மாவட்ட அளவில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க இப்போது உள்ள நிர்வாகிகளை தற்காலிகமாக அதே பதவிகளில் தொடரச் செய்வது என்றும் இந்தச் சிறப்பு பொதுக்குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x