Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM

2,650 ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 2,650 ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பணிநிரந்தரம், ரூ.18,000 மாத ஊதியம், ரூ.25,000 கரோனா நிவாரணம், அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

பொதுச் செயலர் வகிதா நிஜாம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு ஏஐடியுசி தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர் டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பணிபுரியும் 2,650 ஆஷாபணியாளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். கிராமப்புறங்களில் ஆஷா பணியாளர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய சுகாதாரத் திட்டத்தின்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு பகுதிநேரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. காசநோய், கர்ப்பிணிகளைக் கண்டறிந்து பதிவு செய்பவர்களுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, 42 வயதுக்கு உட்பட்ட, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டு பயிற்சிகொடுத்து, ஆண்டுக்கு 60 பேரைநிரந்தர செவிலியராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 4,900 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் விரைவில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x