Published : 18 Mar 2016 09:00 AM
Last Updated : 18 Mar 2016 09:00 AM

நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பால் ரூ.60 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு: கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் தொடர் கடை யடைப்பு போராட்டத்தால் இதுவரை யில் ரூ.60 ஆயிரம் கோடி வர்த் தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்ற னர். திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க முடியாமலும், அவசரத் துக்கு நகைகளை விற்க முடியாமலும் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கலால் வரியை ரத்து செய்யக் கோரி கடந்த 2-ம் தேதி முதல் நாடுமுழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நாடுமுழுவதும் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

ரூ.300 விலை உயர்வு

தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரி மூலம் உற்பத்தியாளர்கள் பவுனுக்கு ரூ.300 வரை உயர்த்த வாய்ப்புள்ளது. மேலும் மத்திய கலால் வரித்துறையினர் திடீரென ஆய்வு நடத்தும்போது நகைக்கடை உரிமையாளர்கள் உற்பத்தியான நகை, வாடிக்கையாளர்களின் நகை கள், பழைய நகைகள் ஆகிய வற்றை அடையாளம் காட்டுவதில் நடைமுறையில் சிக்கல் உள்ளது. இதனால் எங்களுக்கு அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப் படலாம்.

அடுத்த சில மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் போது தற்போதுள்ள வாட் வரி, சேவை வரி, மத்திய கலால் வரி ஆகியவை நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தற்போது திடீரென எங்களுக்கு கலால் வரி விதிப்பதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.

கடந்த 16 நாளாக நடத்தப் பட்டு வரும் நகை கடை உரிமை யாளர்களின் போராட்டத்தால் ரூ.60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கலால் வரியை ரத்து செய்ய கோரி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக நகை வியா பாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்துகள் வருமாறு:

பி.ரமேஷ் (தங்கமயில் நகைக்கடை துணை நிர்வாக இயக்குநர்)

கடந்த 1989-ம் ஆண்டில் தங்க கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும் கலால் வரியை போன்றதுதான். அதை எதிர்த்து போராடியதால் தங்க கட்டுப்பாடு சட்டம் வாபஸ் பெறப்பட்டது. தங்கத்துக்கு கலால் வரியை கொண்டுவருவது அத்துறை அதிகாரிகளின் அராஜகத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். மேலும், கலால் வரிக்கு ஏற்றார்போல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் நகை தொழிலை சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

சுதீர் கபூர் (பீமா நகைக்கடை நிர்வாக பங்குதாரர்)

மத்திய அரசு வருவாய் பெற விரும்பினால் ஏற்கெனவே, வசூலிக்கப்பட்டு வரும் இறக்குமதி வரியை கூடுதலாக ஒரு சதவீதம் உயர்த்தி கொள்ளலாம். ஆனால், கலால் வரி என்ற புதிய பிரிவை உருவாக்க வேண்டாம் என வலியுறுத்துகிறோம். புதிய தாக கலால் வரியை நகை கடைகளுக்கு புகுத்துவதால் நகை கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x