Published : 07 Oct 2021 07:42 PM
Last Updated : 07 Oct 2021 07:42 PM

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று கொள்முதல் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7.10.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், தற்போது தமிழ்நாட்டில் குறுவைப் பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, அப்பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும், டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

குறுவைப் பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 1-10-2021 முதல் 6-10-2021 வரையில் 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், கொள்முதல் பணிகள் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இப்பணிகளை மேற்பார்வை இடுவதற்காக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x