Published : 07 Oct 2021 04:22 PM
Last Updated : 07 Oct 2021 04:22 PM

தமிழகத்தில் புதிதாக 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை

தமிழகத்தில் புதிதாக 850 இடங்களுக்கு மருத்துவச் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 07) சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டு எண்ணிக்கையில் 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா 150 இடங்கள் வீதம் மருத்துவ மாணவர் சேர்க்கை கோரிக்கையை முதல்வர் மத்திய அரசின் பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதத்தின் வாயிலாகவும், நேரிலும் தெரிவித்ததன் அடிப்படையிலும், நானும், மருத்துவத் துறையின் செயலாளரும் நேரில் சென்று மனு அளித்து ஆய்வுக்குழு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. ஆய்வுக் குழுவும் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு 850 இடங்களுக்கு மருத்துவச் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 800 இடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதில், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வுக் குழுவினர் சிறிய சிறிய குறைபாடுகளைக் குறிப்பிட்டிருந்தனர்.

அவையெல்லாம் கடந்த 10 நாட்களாக நிவர்த்தி செய்யப்பட்டு அதற்கான ஆவணங்களும், அதேபோல் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆய்வுக் குழுவினர் சிறிய குறைபாடுகளைச் சொல்லியிருந்தனர்.

அவையும் சரி செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்களை மருத்துவக் கல்வி இயக்குநர் இன்று டெல்லிக்குச் சென்று, சம்பந்தப்பட்ட மத்திய அரசின் அலுவலர்களைச் சந்தித்து எடுத்துச் சொல்லி நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிலுவையில் வைத்திருக்கிற தலா 50 இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு உடனடியாக ஆய்வுக் குழு அனுப்பவும் கேட்க உள்ளார்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x