Published : 07 Oct 2021 03:41 PM
Last Updated : 07 Oct 2021 03:41 PM

அரசு மருத்துவமனையில் பிலிம் நெகட்டிவ் போட முடியாத நிலை என ஓபிஎஸ் கூறுவது கேலிக்கூத்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை

அரசு மருத்துவமனையில் பிலிம் நெகட்டிவ் போட முடியாத நிலை உள்ளது என, ஓ.பன்னீர்செல்வம் கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 07) சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டு எண்ணிக்கையில் 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:''

''கடந்த வாரம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே செய்யப்பட்டு, அதன் முடிவு பேப்பரில் வழங்கப்படுகிறது என்கிற புகார் ஓரிரு ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு வருகிறது. இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எக்ஸ்ரே என்பது டிஜிட்டல் மையமாகிவிட்டது.

எக்ஸ்ரே எடுக்கப்படுவது வாட்ஸ் அப் மூலம் தொடர்புடைய மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டு, அதில் அவர்கள் பார்த்துக் கண்காணித்துக் கொள்கின்றனர். என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பேப்பரில்தான் எழுதிக் கொடுக்கிறார்கள். இது அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது.

ஆனால், இரண்டு தொலைக்காட்சிகளில் நிதிச்சுமையின் காரணமாக, பிலிமுக்கு பதிலாக பேப்பரில் எழுதிக் கொடுப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள். உண்மையில் எல்லா இடங்களிலும் எக்ஸ்ரே பிலிம் கையில் கொடுப்பது என்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. அது தனியார் மருத்துவமனைகளில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

விபத்து போன்ற நேரங்களில், ஆவணங்களின் முக்கியத்துவம் கருதி மருத்துவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லும் காரணங்களினால், ஆவணங்களுக்காக பிலிமில் எக்ஸ்ரே முடிவு வழங்கப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் தெரியாமல் தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஏதோ நிதிச்சுமையின் காரணமாக பிலிமுக்கு பதிலாக பேப்பரில் வழங்கப்படுவதாக, அதைப் பெரிதுப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது கேலிக்கூத்தாக உள்ளது.

எனக்கு நன்றாகத் தெரியும். எனது மகன் மருத்துவர் இளஞ்செழியன் ரேடியாலஜி மருத்துவர். லண்டனில் எஃப்.ஆர்.சி.ஆர்., டி.டி.ஐ.ஆர், எம்.டி. ரேடியோலாஜி படித்து, தங்கப்பதக்கம் பெற்றவர். உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நான்கைந்து பட்டங்களைப் பெற்றவர். லண்டனில் டெலி ரேடியாலஜி என்கிற அமைப்பை வைத்து நடத்துகிறார்.

லண்டனில் 200 மருத்துவமனைகளில் இருந்து அவருடைய கணினிக்கு எக்ஸ்ரே முடிவுகள் வரும். அவர் அதைப் பார்த்துக் குறிப்பெடுத்து பிறகு அனுப்புவார். இப்படி டெலி-ரேடியாலஜி முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கிறது.

இப்போது யாரும் எக்ஸ்ரே முடிவுகளைக் கையில் எடுத்துக்கொண்டு செல்வதில்லை. விஞ்ஞானம் இப்படி வளர்ச்சியடைந்த நிலையிலும், தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்று செய்தி வெளியிடுவது முறைதானா? என்பதை ஊடகங்கள் பரிசீலிக்க வேண்டும்.

அரசின் சார்பில் ஏழை, எளியோருக்கு மருத்துவம் அளிப்பதற்கு, ஊடகங்கள் மருத்துவ சேவை செய்வதற்கு உதவ வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இப்படி பிலிம்கள் வழங்கப்படுவதில்லை என்று வதந்திகளைப் பரப்பினால் மக்கள் சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு வருவார்களா? என்பதை யோசிக்க வேண்டும்.

இவ்வாறு வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும். தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். தொலைபேசி மூலம் எங்களுக்குத் தெரிவித்தால், உடனே அதைச் சரி செய்துவிடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவத்துக்கு தாம் பட்ஜெட் நிதி ஒதுக்கியபோது ரூ.19,420 கோடி மருத்துவத் துறைக்கு ஒதுக்கியதாகவும், தற்போது ரூ.18,933 கோடி ஒதுக்கப்பட்டு, 487 கோடி ரூபாய் நிதி குறைவாக மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் முதல்வராக இருந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைத் தலைப்பு வாரியாக அவர் பார்க்க வேண்டும். மருத்துவத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? மருந்துத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? மருத்துவப் பராமரிப்புப் பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதில் எந்த நிதியிலாவது, நீங்கள் மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கியதற்கும், இப்போது ஏதாவது ஒரு பிரிவில் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட முடியுமா? ஒட்டுமொத்தமாக ரூ.487 கோடி குறைவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

மினி கிளினிக் என்று ஆரம்பித்தீர்கள். அதற்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உங்கள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில், செவிலியர்களுக்கு சம்பளம் என்று அறிவித்தீர்கள். செவிலியர்களை எங்கே பணியமர்த்தினீர்கள்?

நீதிமன்றம் செவிலியர்களை எடுக்கத் தடை விதித்தது. எங்கே செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கினீர்கள்? ஒரு செவிலியர்களைக் கூட நியமிக்கவில்லை. இல்லாத செவிலியர்களுக்கு ஏன் ரூ.487 கோடி நிதி ஒதுக்க வேண்டும்? ஏற்கெனவே அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கோவிட் நிதியின் கீழ் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசிடமிருந்து நானும், துறையின் செயலாளரும் கோவிட் மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.800 கோடி அளவில் நிதியைப் பெற்றிருக்கிறோம். இந்த நிதி மறுமதிப்பீடு செய்த பிறகுதான் சேரும். இன்னும் 4,900 செவிலியர்களை நியமிக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவர்களுக்கு சம்பளம் கூட இந்நிதியின் கீழ்தான் வழங்கப்படும். அப்போதுதான் இது நிதிநிலை அறிக்கையின் கீழ் எவ்வளவு நிதி அளிக்கப்படுவது தெரியவரும். இவையெல்லாம் தெரியாமல் 10 ஆண்டுகாலம் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, ஏதோ தொலைக்காட்சியில் வந்த செய்திகளை வைத்து அறிக்கை விடுவது ஆரோக்கியமல்ல?

உங்கள் ஆட்சியில் பிபிஇ கிட் ரூ.385 ரூபாய்க்கு வாங்கினீர்கள். தற்போது 139.50 பைசாவுக்கு வாங்கப்படுகிறது. சாப்பாட்டுக்கு ரூ.550 கொடுத்தீர்கள். தற்போது ரூ.350 செலவழிக்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு விடுதி தங்குமிடம் உணவுக்கு ரூ.900 ரூபாய் ஒதுக்கினீர்கள். தற்போது அது ரூ.750 ஆக வழங்கப்படுகிறது.

அதுபோல் முகக்கவசம் 9 ரூபாய் 80 காசுக்கு வாங்கினீர்கள். இப்போது 85 காசு தொடங்கி 1 ரூபாய் 15 காசுக்கு வாங்கப்படுகிறது. கூடுதலாக நிதி ஒதுக்கினோம் என்று சொல்கிறீர்கள். இதில், எதிலாவது குறைவாக நிதி ஒதுக்கினோம் என்று சொன்னால், நேராக விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.

இதையெல்லாம் மறைத்துவிட்டு, அரசு மருத்துவமனை மீது வதந்திகளை இரண்டு தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் பரப்புவதை நிதியமைச்சராக இருந்தவர் செய்யலாமா?".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x