Published : 07 Oct 2021 12:55 PM
Last Updated : 07 Oct 2021 12:55 PM

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

கூட்டுறவு சங்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களை இடைநீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் தலைவரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு சங்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களிடம் விசாரணை நடத்தவும், பணி நீக்கம் செய்யவும் ஏற்கெனவே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஊதியம் பெறும் ஊழியர்களாகக் கருதி இடைநீக்கம் செய்யும் வகையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட கூட்டுறவு சங்க சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் சத்திகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று (அக். 07) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி, எம்.பி., எம்எல்ஏக்கள் போன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்ய முடியாது என்றும், இதற்கு முரணாகக் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.

தமிழக அரசுத் தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், சங்கங்களின் நலனுக்காகவே சட்டத்திருத்தம் கொண்டுவரப்படதாகவும், பல்வேறு முறைகேடுகளால் சங்கங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே, இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது எனக்கூற முடியாது என்றும், அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிகாரமின்மை அடிப்படையிலும், அடிப்படை உரிமை மீறல் அடிப்படையிலும் மட்டுமே ஒரு சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர முடியும் எனவும், தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை இடைநீக்கம் செய்ய சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கியதில் தவறில்லை என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

கையாடல், நம்பிக்கை மோசடி, தவறான நிர்வாகம் தொடர்பான புகார்கள் வரும்போது இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நடத்திய விசாரணையில் ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருந்தால் மட்டுமே இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தினர்.

கூட்டுறவு சங்கத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவராகப் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்ததுடன், அதன் அடிப்படையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதில் தவறில்லை எனத் தெரிவித்து, சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x