Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றிச் சென்றபோது தோணி மூழ்கியது- நடுக்கடலில் தத்தளித்த 9 தொழிலாளர் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்றதோணி நடுக்கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த 9 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி காந்தி நகரைச்சேர்ந்த வெலிங்டன் என்பவருக்குசொந்தமான ‘அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா' என்ற தோணி, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து சிமென்ட், காய்கறிகள் உள்ளிட்ட 287 டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றிக்கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டது.

இந்த தோணியின் மாஸ்டராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (40) என்பவர் இருந்தார். தொழிலாளர்களாக மரிய அந்தோணி (23), சிரான் (26), சீலன் (25), மில்டன் (50), நாராயணன் (61), அடைக்கலம் (63), வெசேந்தி (61), தொம்மை (63) ஆகிய 8 பேரும் சென்றனர்.

இந்த தோணி நேற்று முன்தினம் காலை மாலத்தீவு அருகே சுமார் 250 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியதால், தோணியை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. தோணியில் இருந்த சில சரக்குகளை கடலில் எடுத்து போட்டுவிட்டு தோணியை மேற்கொண்டு செலுத்த முயன்றனர். ஆனால், பலத்த காற்று மற்றும் எதிர்திசை நீரோட்டம் காரணமாக தோணியை இயக்க முடியவில்லை.

இதையடுத்து, தூத்துக்குடிக்கே திரும்பிவிடுவது என முடிவு செய்து தோணியை திருப்பிச் செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 130 கடல் மைல் தொலைவில், தோணியின் இயந்திர பகுதிக்குள் கடல்நீர் புகுந்தது. இதன் காரணமாக தோணி கொஞ்சம், கொஞ்சமாக கடலில் மூழ்கத் தொடங்கியது.

தோணியில் இருந்தவர்கள் சென்னையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவல், தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் மாலத்தீவு கடலோர காவல்படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. மீட்பு பணியை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அதிகாரிகளிடம்கனிமொழி எம்பியும் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, பாதிக்கும் மேல் தோணி மூழ்கியதால், 9 தொழிலாளர்களும் தத்தளித்தனர். அதிகாரிகள் இரவோடு இரவாக மீட்புப் பணியை முடுக்கிவிட்டனர். கொழும்பில் இருந்து மாலத்தீவு நோக்கி சரக்கு பெட்டக கப்பல் ஒன்று செல்வதை அறிந்து, அந்த கப்பலை தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கப்பட்டது. அந்த சரக்கு பெட்டக கப்பலில் இருந்த மாலுமிகள், பாதி மூழ்கிய நிலையில் இருந்த தோணியை கண்டறிந்து, அதில் இருந்த 9 பேரையும் நேற்று அதிகாலை 3 மணியளவில் பத்திரமாக மீட்டு மாலத்தீவுக்கு அழைத்துச் சென்றனர். சரக்குகளுடன் தோணி கடலில் மூழ்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x