Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

ஊழல் செய்யலாம் என கனவு காணாதீர்: போஸ்டர் ஒட்டி இளைஞர்கள் எச்சரிக்கை

கள்ளிகுளம் பஞ்சாயத்து இளைஞர் அணி என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நிறை வடைந்துள்ள நிலையில், நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர் மற்றும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 9-ம் தேதி 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழல் செய்யலாம் என கனவு காணாதீர்.. இந்நிலையில், கள்ளிகுளம் பஞ்சாயத்து இளைஞர் அணி என்ற பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி அப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. சமூக வலை தளங்களில் இந்த சுவரொட்டி பகிரப்பட்டு வருகிறது. ஊழலுக்கு எதிராக அதில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. அந்த சுவரொட்டியிலுள்ள முக்கிய வாசகங்கள் வருமாறு:

ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை, ஊராட்சி நிதியில் இருந்து எடுத்துவிடலாம் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். கிராம சபை கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு செலவு கணக்கு கேட்கப்படும். கேட்டு அறியப்பட்ட கணக்குகள் மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வாங்கப்பட்டு சரிபார்க்கப்படும். ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப் பட்டால், ஊழல் செய்தவர் பெயர், புகைப்படம், பதவி போன்றவை கள்ளிகுளம் இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படும். மேலும் மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு தடுப்பு துறையில் புகார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x