Published : 03 Oct 2021 11:48 am

Updated : 03 Oct 2021 11:48 am

 

Published : 03 Oct 2021 11:48 AM
Last Updated : 03 Oct 2021 11:48 AM

மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவளிக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

people-use-us-stalin-s-request-for-good-governance-in-the-local-government

சென்னை

மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், உத்தரவிடுங்கள். உங்களுக்காக எந்நாளும் உழைப்போம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள காணொலியில் பேசியதாவது:

’’உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வாக்களிக்கத் தயாராக இருக்கும் மக்களுக்கு வணக்கம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று திமுக கூட்டணிக்கு வாக்களித்தீர்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுகவிற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் வாக்குகளை வழங்கினீர்கள். உங்களால் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

தேர்தலுக்கு முன்பாக என்னென்ன வாக்குறுதிகளைத் தந்தோமோ, அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம், 14 வகையான மளிகைப் பொருட்கள், ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு, தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்ட ஐந்து சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடி, ஊரகப் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராமப் பகுதிகளை மேம்படுத்த ’நமக்கு நாமே’ திட்டத்தைப் புதுப்பிக்க உள்ளோம், ’வரும்முன் காப்போம் திட்டம்’, ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் பொங்கலுக்குள் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம் என்பன போன்ற ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது என்னிடம் நீங்கள் அளித்த மனுக்களில் பெரும்பான்மையானவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் செய்திருக்கிறோம் என்பதைத் தலைநிமிர்ந்து சொல்ல ஆசைப்படுகிறேன். ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் இதைச் செய்து கொடுத்திருக்கிறோம் என்பதுதான் திமுகவின் தனித்தன்மை.

பத்தாண்டு காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் அவர்கள் இரண்டு தேர்தலின்போதும் கொடுத்த வாக்குறுதியை 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆனால் நாங்கள் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். அதுவும் 4 மாதங்களில் நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே திமுக அரசாக மட்டும்தான் இருக்கமுடியும். இத்தகைய விவேகமும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வருங்காலத்தில் இன்னும் ஏராளமான திட்டங்களைக் கொண்டுவர உள்ளோம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். நாங்கள் எவ்வளவு சிறந்த திட்டங்களைத் தீட்டினாலும் அது பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் மக்களைச் சென்று சேரும். அதற்கு எவ்விதமான தடையும் இல்லாமல் எல்லா திட்டங்களும் மக்களைப் போய்ச் சேர வழிவகுக்கும் விதமாக உங்கள் வாக்குகள் அமைய வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர்களின் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்காகவே செயல்படுகிறோம், மக்களுக்காகவே சிந்திக்கிறோம். மக்களே, எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம்.

உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக, கலைஞரின் மகனாக, கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து நல்லதொரு தமிழ்நாட்டை அமைப்போம்’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


தவறவிடாதீர்!உள்ளாட்சியிலும் நல்லாட்சிமுதல்வர் ஸ்டாலின்உள்ளாட்சித் தேர்தல்திமுகவாக்காளர்கள்அதிமுகதிமுக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்Good governanceதிமுக கூட்டணி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x