Published : 01 Oct 2021 06:24 PM
Last Updated : 01 Oct 2021 06:24 PM

மசினகுடி அருகே மேலும் ஒருவரை அடித்துக் கொன்றது புலி; சுட்டுக்கொல்ல உத்தரவு: பதற்றத்தில் மக்கள் போராட்டம்

முதியவரை அடித்துக் கொன்ற புலி.

மசினகுடி

கூடலூரில் 7 நாட்களாக வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்த ஆட்கொல்லிப் புலி, இன்று மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் பழங்குடியின முதியவரை அடித்துக் கொன்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுக்கா, தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு, வனத்துறையினர் புலியைப் பிடித்துச் செல்ல முடிவு செய்து தனிப்படை அமைத்துக் கண்காணிக்கத் தொடங்கினர்.

இரண்டு நாட்கள் அதே பகுதியில் முகாமிட்டிருந்த புலி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேஃபீல்ட் எஸ்டேட் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு மாட்டைத் தாக்கிக் கொன்றது. இதையடுத்து, ஒட்டுமொத்த வனத்துறையும் மேஃபீல்ட் எஸ்டேட் பகுதிக்குச் சென்றது.

மேஃபீல்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள கற்பூரச் சோலையில் பதுங்கி, தேயிலைத் தோட்டங்களில் புலி சுற்றித் திரிந்தது. இதை வனத்துறையின் கண்காணிப்புக் குழுவினர் இரண்டு முறை பார்த்துள்ளனர். புலி வேகமாக ஓடி புதரில் மறைந்துவிட்டதால், மயக்க மருந்து செலுத்த அவகாசம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அந்தப் புலி மீண்டும் தேவன் எஸ்டேட் பகுதிக்குள் நடமாடுவதைக் கண்டறிந்த கண்காணிப்புக் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, புலி ஏற்கெனவே இருந்த புதர் பகுதியில் இருந்து அருகில் உள்ள சதுப்பு நிலப் புதருக்குள் ஓடி மறைந்தது. இதனால், புலியைப் பிடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகளில் வனத்துறையினருடன், கேரள அதிவிரைவுக் குழு மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகளில் ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்பட்டது.

புலிக்கு மயக்க ஊசி போட்டுப் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் செல்வதற்கு வசதியாக முதுமலையில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக். 01) காலை டி.23 என்ற அடையாளம் காணப்பட்ட ஆட்கொல்லிப் புலி, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் தென்பட்டது. அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரைத் தாக்க முயன்றது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் உடனடியாக வெளியில் யாரும் நடமாட வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கல்குவாரி என்ற இடத்தில் மசினகுடி அருகேயுள்ள குறும்பர்பாடியைச் சேர்ந்த பசுவன் (65) என்ற பழங்குடியின முதியவரை அடித்து வனத்துக்குள் இழுத்துச் சென்றது.

தேவன் எஸ்டேட்டில் முகாமிட்டிருந்த வனத்துறையினர் தற்போது சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லிப் புலியைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "கூடலூரிலிருந்த புலி சிங்காரா வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. எனவே, மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரித்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒருவரைப் புலி தாக்கிக் கொன்றுள்ளது. புலியைப் பிடிக்கும் பணியில் 75 பேர் ஈடுபட்டு வருகின்றனர். புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முழு வீச்சில் வனத்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர்" என்றார்.

மேலும், முதன்மை தலைமை வனப்பாதுகாவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர், நீலகிரியில் முகாமிட்டுப் புலியைப் பிடிக்கும் பணியைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆட்கொல்லிப் புலியை சுட்டுக் கொல்ல முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டதை அடுத்து வனத்துறையினர் புலியைத் தேடி வருகின்றனர்.

நான்கு பேர் பலி:

சந்திரனைக் கொன்ற புலி டி.23 என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதுமலை வனப் பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. ஆகஸ்ட் மாதம் பொக்கபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரை அதே புலி தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த மாதம் 24-ம் தேதி தேவன் எஸ்டேட் பகுதியில் தோட்டத்தில் பணிபுரிந்த சந்திரன் என்ற தொழிலாளியைப் புலி தாக்கிக் கொன்றது. இந்நிலையில், இன்று (அக். 01) பசுவன் என்ற முதியவரைக் கொன்றுள்ளது. ஆட்கொல்லிப் புலியின் வேட்டை தொடர்ந்து வருவதால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x