Last Updated : 30 Sep, 2021 04:02 PM

 

Published : 30 Sep 2021 04:02 PM
Last Updated : 30 Sep 2021 04:02 PM

போலி ஆவணங்களைப் பெற்று கடன் வழங்கி ரூ.13 கோடி மோசடி: கனரா வங்கியின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

வீடுகள் கட்ட போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு கடன் வழங்கி ரூ.13 கோடி இழப்பு ஏற்படுத்திய கனரா வங்கியின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் கனரா வங்கிக் கிளையில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர் சண்முகம் (66). 'மாருதி பில்டர்ஸ்' எனும் நிறுவனத்தை நடத்திவந்த குமரன் (63) என்பவர், சித்திரக்கனி எனும் இடைத்தரகர் மூலம் வீடுகள் கட்டுவதற்காகக் கடன் பெற வங்கிக் கிளையை அணுகியுள்ளார்.

பின்னர், ரயில்வே, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை போன்றவற்றில் அரசு வேலையில் இல்லாதவர்களை, அங்கு பணிபுரிவதுபோல போலி ஆவணங்கள், வருமானச் சான்றுகளைச் சமர்ப்பித்து, அவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்காக மொத்தம் 272 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து கடன் பெற்றுள்ளனர். இதற்கு சண்முகம் உடந்தையாக இருந்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுவரை இவ்வாறு கடன் பெற்றுள்ளனர். இதனால், வங்கிக்கு ரூ.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கனரா வங்கிக் கிளை சார்பில் அளித்த புகார் அடிப்படையில், 2009-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, கோவையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், சண்முகம், குமரன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும், சித்திரக்கனிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று (செப். 30) உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x