Published : 29 Sep 2021 11:45 AM
Last Updated : 29 Sep 2021 11:45 AM

5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (செப். 29) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பை இம்மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக, வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் இந்த வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை முடக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழகத்தில் சென்னை வானொலி நிலையத்துக்கு அடுத்ததாக, அதிக அளவில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பும் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய வானொலி நிலையங்களையும், புதுச்சேரி வானொலி நிலையத்தையும் தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக மாற்ற பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

அதன்படி இதுவரை தங்களின் ஒலிபரப்பு எல்லைக்குட்பட்ட பகுதிகள் சார்ந்த நிகழ்ச்சிகளை சொந்தமாகத் தயாரித்து ஒலிபரப்பி வந்த இந்த நிலையங்கள், இனி சென்னை வானொலி நிலையம் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளை மட்டும் தொடர் ஒலிபரப்பு செய்யும்; இவை தவிர சென்னை வானொலி நிலையத்தால் ஒதுக்கப்படும் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் இவை சொந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

பிரச்சார் பாரதி நிறுவனத்தின் இந்த முடிவு என்பது, மண்டல வானொலி நிலையங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா எவ்வாறு பன்முகத்தன்மை கொண்ட நாடோ, அதேபோல் தமிழகமும் பன்முகத்தன்மை கொண்ட மாநிலம்தான்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் வெவ்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். இந்தப் பகுதிகளில் நடைபெறும் தொழில்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக உள்ளன. இவை அனைத்தையும் கடந்து இந்தப் பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் முறையும், சாகுபடி செய்யப்படும் பயிர்களின் வகைகளும் மாறுபடுகின்றன என்பது உலகறிந்த உண்மை.

இந்த உண்மைகளை உணர்ந்ததால்தான் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஏற்ற வகையிலான நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பும் நோக்குடன் ஒவ்வொரு மண்டலத்திலும் வானொலிகளை மத்திய அரசு தொடங்கியது. அந்தந்தப் பகுதிகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நோக்கத்துடன் அந்த வானொலிகளும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகின்றன. உள்ளூர் சார்ந்த நிகழ்ச்சி உள்ளடக்கங்களை இந்த வானொலிகள் கொண்டிருந்ததால் அவை அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வியலுடன் ஒன்றிவிட்டன.

இத்தகைய சூழலில், உள்ளூர் சார்ந்த நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு, சென்னை வானொலியின் நிகழ்ச்சிகளை தொடர் ஒலிபரப்பு செய்வது சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களிடம் வரவேற்பைப் பெறாது. அதுமட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களாலும் வெகுவாக நேசிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவது மக்களை உளவியல்ரீதியாக பாதிக்கும்.

உணர்வு சார்ந்த பிரச்சினைகள் இப்படியென்றால் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளும் ஏராளமாக உள்ளன. 5 வானொலி நிலையங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பு கணிசமான அளவில் குறைக்கப்படும்போது, அதற்கேற்ற வகையில் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதனால், இளைஞர்களுக்குப் போதிய வேலைவாய்ப்பு கிடைக்காது.

அதுமட்டுமின்றி, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி ஆகிய வானொலி நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வானொலி நிலையங்கள் மூடப்பட்டால், அவர்களில் பெரும்பான்மையினர் வேலையிழக்க நேரிடும்.

அதேபோல், இந்த வானொலிகளின் நிகழ்ச்சிகளை நம்பியுள்ள நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாய்ப்புகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துவிடுவர்.

மண்டல வானொலிகள் மூலம் வழங்கப்படும் வேளாண் தொழில் சார்ந்த வழிகாட்டுதல் நிறுத்தப்பட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். பிரச்சார் பாரதி மூலம் நடத்தப்படும் மண்டல வானொலிகளின் இடத்தை வணிக நோக்கம் கொண்ட தனியார் பண்பலை வானொலிகளால் நிரப்ப முடியாது. இவற்றையெல்லாம் பிரச்சார் பாரதி கருத்தில் கொள்ள வேண்டும்.

உலக அளவிலான முன்னேற்றத்துக்கு அதிகாரப் பரவல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக வானொலிகளும் மக்களை நோக்கிச் செல்ல வேண்டும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடியிருப்பிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களிலும் சமுதாய வானொலிகள் நிறுவப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் மண்டல வானொலிகளின் நிகழ்ச்சிகளை முடக்கிவிட்டு சென்னை வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது தவறு.

எனவே, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி வானொலிகளை முடக்கும் முடிவை பிரச்சார் பாரதி கைவிட வேண்டும். அவை வழக்கம் போல தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x