Last Updated : 21 Mar, 2016 08:20 AM

 

Published : 21 Mar 2016 08:20 AM
Last Updated : 21 Mar 2016 08:20 AM

காஷ்மீர் பனிச்சரிவில் புதையுண்ட நெல்லையைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி: 3 நாட்களுக்குப் பிறகு உடல் மீட்பு

காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதி பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் விஜயகுமார் (23) உயிரிழந்தார். 3 நாட்கள் தேடுதல் பணிக்குப் பிறகு 12 அடி ஆழத்தில் புதையுண்டியிருந்த அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.

விஜயகுமாரின் மரணத்தால் அவரது சொந்த ஊரான திருநெல் வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, வல்லராமபுரம் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைச் சிகரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் புதையுண்டனர். அவர் களில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட னர். கர்நாடகாவை சேர்ந்த ஹனு மந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரில் 4 பேர் தமிழர்கள்.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதி பனிச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழக ராணுவ வீரர் பலியாகி உள்ளார்.

ஒரு வீரர் உயிருடன் மீட்பு

சுமார் 17,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கார்கில் மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 17-ம் தேதி வழக்கம்போல பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் பனிச்சரிவு ஏற்பட்டு 2 வீரர்கள் காணாமல் போயினர்.

முதல்நாள் தேடுதல் பணியில் சுஜித் என்ற ராணுவ வீரர் மீட்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். மோப்ப நாய்களின் உதவியுடன் மற்றொரு வீரரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. 3 நாட்களுக்குப் பிறகு நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, வல்லராமபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கே.விஜய குமார் பனிச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளார். மோசமான வானிலையிலும் 3 நாட்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டோம். இறுதியில் சுமார் 12 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த விஜயகுமாரின் சடலத்தை நேற்று மீட்டோம்.

அவருக்கு பெற்றோரும் 2 சகோ தரிகளும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சோகத்தில் மூழ்கிய வல்லராமபுரம்

உயிரிழந்த விஜயகுமாரின் தந்தை கருத்தபாண்டியன், தாயார் முத்துக்குட்டி. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் அழைப்பின்பேரில் கோயில் திருவிழாவில் பங்கேற்க விஜயகுமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

பிளஸ் 2 வரை படித்துள்ள அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். அதன்பிறகு காஷ்மீர் மாநிலம் கார்கில் அருகில் உள்ள கன்னைசவுக் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். அங்குதான் அவர் பனிச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளார். இதனால் அவரது சொந்த கிராமமான வல்லராமபுரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

அவருடன் ராணுவ பணியில் சேர்ந்த வெள்ளத்துரை, ரமேஷ், ராஜா, மகேஷ் ஆகியோர் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.

அவர்கள் கூறியபோது, வல்லராமபுரத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ராணு வத்தில் பணியாற்றி வருகிறோம். நாட்டை காக்கும் பணியில் உயி ரிழந்த எங்கள் நண்பன் விஜய குமாரை நினைத்து பெருமிதம் கொள்கிறோம், அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x