Published : 05 Mar 2016 04:52 PM
Last Updated : 05 Mar 2016 04:52 PM

ஜெயலலிதாவின் படங்கள் மறைக்கப்படுகின்றனவே தவிர அகற்றப்படவில்லை: ஸ்டாலின்

உண்மையில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்படுவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவையெல்லாம் மறைக்கப்படுகின்றன என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் நேர்காணலுக்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தேமுதிக இணைவது தாமதவதால், திமுகவின் தேர்தல் பணிகள் தாமதமாகிறதா ?

அதனால் எங்களது பணிகள் தாமதமாகாது, எல்லாமே முறைப்படி நடந்து கொண்டு உள்ளது. இன்றோடு, திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட, 197 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்திருந்த 3777 பேரை அழைத்து நேர்காணல் செய்துள்ளோம். நாளை திருச்சியில் திமுக மகளிர் அணியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க நான் செல்வதால், நாளை ஒரு நாள் நேர்காணல் நடைபெறுவதில் இடைவெளி இருக்கும். பிறகு நாளை மறு நாள் நேர்காணல் பணி முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கை பணிகள் தொடருகிறது. மேலும் உடன்பாடுகள் காண்பது, பணிக்குழுக்கள் அமைப்பது, தேர்தலை சந்திப்பது, வாக்குப்பதிவு நடப்பது, அதற்குப் பிறகு வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பது என எல்லாப் பணிகளும் விரைவில் நடக்கும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்படுகிறது. வேறு என்னென்ன பணிகளை அரசு செய்ய வேண்டும் ?

உண்மையில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்படுவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. ஆகவே, படங்களை அகற்றும் பணி இன்னும் செய்யப்படவில்லை. அவையெல்லாம் அகற்றப்பட வேண்டும். ஆக, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அது நடைபெறும்.

நேர்காணலில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்களா?

இன்றைய நிலையில் அதற்கு பதில் சொல்வதற்கில்லை. தேர்வானவர்களை விரைவில் தலைவர் கருணாநிதி அறிவிப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x