Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்: உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கட்சி அலுவலகங்கள், வீடுகள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்பு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி அளவில் கட்சி அலுவலகங்கள், வீடுகள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமைஅலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர்,தாயகம் கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “மத்தியபாஜக அரசு, நாட்டின் சொத்துகளான பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறது. மோடி அரசின் தவறான கொள்கைகள், வரிவிதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதை கண்டித்து போராடி வருகிறோம்’’ என்றார்.

திமுக மகளிரணிச் செயலாளர்கனிமொழி, சென்னை ஆழ்வார்பேட்டை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மகளிரணி நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் சென்னை கே.கே.நகர் பகுதியில்தன் வீடு முன்பு கருப்புக் கொடிஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை வேப்பேரி பெரியார் திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை அண்ணா நகரில்உள்ள தனது இல்லம் முன்பு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

சென்னை தியாகராய நகரில்உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித்தலைவர் திருமாவளவன், வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மண்ணடியில் உள்ள கட்சி அலு வலகத்தில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஓசூரில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x