Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

கடலூர் எம்பி-யின் முந்திரி ஆலையில் நடந்த தொழிலாளர் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற ராமதாஸ் கோரிக்கை: டி.ஆர்.வி.ரமேஷ் எம்பி உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு

சென்னை/விருத்தாசலம்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர் கோவிந்தராசு கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் எதிரிகளை தப்பவைக்க செய்யப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

உயிரிழந்த கோவிந்தராசுவின் வாயில் நஞ்சை ஊற்றி அவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொய் செய்தி பரப்பப்படுகிறது. கொல்லப்பட்ட கோவிந்தராசு பாமக நிர்வாகி. அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாமக ஓயாது.கோவிந்தராசு கொலை தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.ஆர்.வி ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் தரப்பட்டுள்ளது.

ஆனால், அந்தப் புகார் மீதுஎந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கோவிந்தராசுவை இரக்கமற்ற முறையில் அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து உடனடியாக அனைத்து எதிரிகளையும் கைது செய்ய வேண்டும். கோவிந்தராசுவின் உடலை வெளிமாவட்ட மருத்துவர்களைக் கொண்டு உடல் கூறாய்வு செய்ய வேண்டும். கூறாய்வு முழுமையாக காணொலி பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கோவிந்தராசு குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், மிகக் கடுமையான போராட்டத்தை பாமக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேலன் தந்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என காடாம்புலியூர் போலீஸார், முந்திரி தொழிற்சாலை நிறுவன பங்குதாரரான கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீதுவழக்குப் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x