Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

டிஇஎஸ் ராகவன், கா.செல்லப்பன், சோனாலி நவாங்குள் உள்ளிட்டோருக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை

திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டிஇஎஸ் ராகவன், தாகூரின் ‘கோரா’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்த கா.செல்லப்பன், தமிழில் சல்மா எழுதிய ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற நாவலை மராத்தியில் மொழிபெயர்த்த சோனாலி நவாங்குள் உள்ளிட்டோருக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு சாகித்ய அகாடமி அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, யுவ புரஸ்கார் விருது ஆகியவை கடந்த ஆக.25-ம் தேதியும், பால் சாகித்ய புரஸ்கார் (சம்ஸ்கிருதம்) செப்.7-ம் தேதியும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களை இயற்றிய எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டிஇஎஸ் ராகவன், பெங்காலியில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘கோரா’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்த கா.செல்லப்பன், தமிழில் சல்மா எழுதிய ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற நாவலை மராத்தியில் மொழிபெயர்த்த சோனாலி நவாங்குள் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுடன் விருதுக்கான செப்பு பட்டயம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் வாழ்த்து

இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘உலக இலக்கியங்களை தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது அரும்பெரும்பணி. அதன்படி, கா.செல்லப்பன், டிஇஎஸ் ராகவன், சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார்.

மூவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ‘சிறந்த மொழி பெயர்ப்புக்கான பிரிவில் தாகூரின் கோரா நாவலைத் தமிழில் மொழி பெயர்த்த செல்லப்பன் மற்றும் திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்த டி.இ.எஸ்.ராகவன் ஆகியோருக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறேன்’ என அறிவித்துள்ளார்..

இதுதவிர, விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு இலக்கியத் துறையினரும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திரா பார்த்தசாரதிக்கு உயர்சிறப்பு அங்கீகாரம்

தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாடமியின் உயர் சிறப்பு அங்கீகாரம் (சாகித்ய அகாடமி பெல்லோஃஷிப்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிர்ஷெண்டு முகோபாத்யாய் (பெங்காலி), எம்.லீலாவதி (மலையாளம்), பால்சந்திர நெமேட் (மராத்தி), தேஜ்வந்த் சிங் கில் (பஞ்சாபி), சுவாமி ராமபத்ராச்சார்யா (சமஸ்கிருதம்) ஆகிய 5 எழுத்தாளர்களுக்கும் உயர் சிறப்பு அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் த.ஜெயகாந்தன் 1996-ம் ஆண்டு சாகித்ய அகாடமியின் உயர் சிறப்பு அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x