Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் குதிர் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பழங்காலக் குதிர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொற்கையில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு வாய்ந்த துறைமுகம் இருந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான இங்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதியும், இங்கிருந்து ஏற்றுமதியும் நடந்துள்ளது.

1966-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் நாகசாமி குழுவினர் இங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சுமார் 52 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பழங்கால கட்டுமானங்கள் மற்றும் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது சுமார் 5 அடி உயரமுள்ள குதிர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அலுவலர்கள் கயிறு கட்டி மேலே எடுத்தனர். நெல் உள்ளிட்ட தானியங்களை சேமித்து வைக்க இக்குதிர் பயன்படுத்தப்பட்டதா என தொல்லியல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ‘‘ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகியவை உலக நாகரீகத்தின் தொட்டில் என்பதற்கு சான்றாக தொடர்ந்து பழங்காலப் பொருட்கள் கிடைத்து வருகின்றன. கொற்கையில் துறைமுகம் தொடர்பான பெரிய ஆலை இயங்கி வந்திருக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x