Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

நீட் தேர்வு விவகாரத்தில் அண்ணாமலை - திருமாவளவன் மோதல்

சென்னை

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நீட் தேர்வை வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் நடைபெற்று வருகிறது. 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு இருந்தபோதுதான் நீட் தேர்வுகொண்டுவரப்பட்டது.

அப்போது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் இருந்தார். நீட் தேர்வு என்பது ஏழை,நடுத்தர மக்களுக்கும் வரப்பிரசாதம் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அரசியலுக்காக இப்போது அவர்கள் கொண்டு வந்தசட்டத்துக்கு எதிராகவே, தீர்மானம்கொண்டு வந்துள்ளனர். ஆண்டுக்காண்டு நீட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும், தேர்ச்சி விகித மும் அதிகரித்துள்ளது.

நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள், நீட் தேர்வுக்குப் பிறகு சேர்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி நடத்துபவர்கள் பற்றி வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிட வேண்டும். மாணவர்களின் தற்கொலைக்கு திமுக நடத்தும் அரசியலே காரணம்” என்றார்

அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் நேற்றுசெய்தியாளர்களிடம் பேசிய அவர்,“நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தமிழகத்தில் பாஜகவைத் தவிரஅனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக அண்ணாமலை பேசி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x