Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

தற்கொலைகளை தடுப்பது குறித்து சத்குருவுடன் காவல்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்

சிறை கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன், காவல்துறை உயரதிகாரிகள் கலந்துரையாடினர்.

இதுதொடர்பாக கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போபாலில் உள்ள மத்திய காவலர் பயிற்சி மையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், சிறைகைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்த கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இதில், சத்குரு பேசும்போது, ‘‘உங்கள் சொந்த புத்திசாலித்தனம், உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வதுதான் உச்சபட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் நாம் உருவாக்க வேண்டும். மனிதர்களின் உள் அனுபவமானது வெளியில் இருந்து சேகரித்த விஷயங்களில் அடிமையாகாமல், வாழ்வின் அடிப்படை அம்சங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதற்கு யோகபயிற்சிகள் உங்களுக்கு உதவி புரியும். யோகா மூலம் ஒருவர் தனக்குள் மகிழ்ச்சிக்கான வேதியியல் மாற்றங்களை தானே உருவாக்கிக் கொள்ள முடியும்.

யோக பயிற்சிகள் மூலம் ஒருவர்தான் விரும்பும் உணர்வை தனக்குள் உருவாக்கி கொள்ள முடியும். இதை சாத்தியப்படுத்த சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகள், சட்ட அமலாக்க துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேசிய அளவில் யோகா வகுப்புகளை நடத்த ஈஷா தயாராக உள்ளது” என்றார்

நிகழ்ச்சியை மத்திய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் பாலாஜி வஸ்தவா நெறியாள்கை செய்தார். ஐபிஎஸ் அதிகாரிகளான சிஆர்பிஎஃப் படைப் பிரிவின் இயக்குநர் குல்தீப் சிங், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் சுனில்குமார் சிங், உத்தரபிரதேச மாநில காவல் துறை இயக்குநர் முகுல் கோயல், பிஹார் சிறைகள் துறை ஐஜி மித்திலேஷ் மிஸ்ரா, தெலங்கானா பிராஸிகியூஷன் துறை இயக்குநர் மைஜெயந்தி ஆகியோர் தாங்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் கேட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x