Published : 13 Sep 2021 09:19 PM
Last Updated : 13 Sep 2021 09:19 PM

காவலர் முதல் ஆய்வாளர்கள் வரையில் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்: முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு

காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை அரசுப் பேருந்துகளில் அடையாள அட்டைகளைக் காட்டி இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்பை காவல்துறையினர் வரவேற்றுள்ளனர்.

தமிழக காவல் துறையில் டிஜிபி தலைமையில் சட்டம் , ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என, சுமார் 1,21,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இவர்களில் 10 சதவீதத்திற்கு மேல் மகளிர் போலீஸார். அதிகாரிகள் தவிர்த்து, டிஎஸ்பி முதல் காவலர்கள் வரையிலும் உரிய நேரத்தில் பதவி உயர்வு, பணப்பலன் போன்ற சலுகைகள் என, காவல் துறையில் கோரிக்கைகள் கிடப்பில் இருப்பதாகவும், சட்டசபையில் காவல்துறைக்கான மானியக்கோரிக்கை விவாதத்தில் இது குறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்படுமா என காவல்துறையினர் மற்றும் தீயமைப்பு சிறைத்துறையினர் எதிர்பார்ப்பில் இருந்தனர். இது தொடர்பாக சில தினத்துக்கு முன்பு இந்து தமிழ் திசை நாளிதழிலும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, அவர்கள் எதிர்பார்த்த வகையில் சுமார் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்டார்.

குறிப்பாக, காவல்துறையில் நிலவும் பதவி உயர்வு போன்ற பிரச்னையை தீர்க்க, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தில் ஒரு பகுதியாக சிறப்பு குறைதீர்க்கும் முகாம், அரசு பேருந்து களில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அடடைகளை காண்பித்து இலவச பயணம், இதற்காக நவீன அட்டை அட்டை வழங்குதல், இது வரை வாய் மொழி உத்தரவாகவே இருந்த இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமைக் காவலர்களுக்கான ஒரு நாள் வார விடுப்பு நடைமுறை, அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதுபோன்று, அவர்களின் மனைவிகளுக்கும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் மாநில நுண்ணறிவு பிரிவு, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, கடலோர காவல் படை, ரயில்வே காவல் படை, காவலர் பயிற்சி பள்ளியில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர்ளுக்கும், சென்னை மாநகர காவல் துறையில் வழங்குவது போன்று உணவுப்படி மாதந் தோறும் வழங்குதல், காவலர்களின் குறைதீர்க்க மாவட்ட , சரகம், மண்டல அளவில் ரூ.25 லட்சம் செலவில் தனிச் செயலி அறிமுகப்படுத்துதல், சிறப்பு உதவி ஆய்வாளருக்கான கால வரம்பை ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி யிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இது குறித்து மதுரை காவல்துறையினர் கூறுகையில், ‘‘ காவல்துறைக்கான மானியக் கோரிக்கையில் காவல்துறை, தீயணைப்பு, சிறைத்துறைக்கான பல்வேறு மேம்பாடு குறித்து அறிவிப்புகளுடன் காவலர்கள், காவல் தொழில்நுட்ப பிரிவினர், சிறை, தீயணைப்பு வீரர்கள் எதிர்பார்த்த சில கோரிக்கைகள் அடங்கிய அறிவிப்புகளும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், பணபலன், பதவி உயர்வு, வார விடுமுறை, குறைதீர் முகாம் போன்ற முக்கிய கோரிக்கைளை துரிதமாக நிறைவேற்றவேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x