Published : 15 Feb 2016 10:49 AM
Last Updated : 15 Feb 2016 10:49 AM

பெசன்ட் நகர் கடற்கரையில் காதலர் தினவிழாவில் சாதி மறுப்பு உறுதி ஏற்பு: திரைக்கலைஞர் ரோகிணி பங்கேற்பு

காதலர் தினத்தை முன்னிட்டு ’மனிதம் இணைப்போம்’ என்ற தலைப்பில் சாதி மறுப்பு உறுதி ஏற்பு மற்றும் சமூக அறிவியல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் பெசன்ட்நகர் எலியர்ட்ஸ் கடற் கரையில் நேற்று நடைபெற்றன.

சரிநிகர் முற்போக்கு திருமண இயக்கம் மற்றும் தகவல் மையம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகிகள் உதயன், பூங்கோதை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரைக்கலைஞர் ரோகிணி, நெல்லை மனோன்மணீயம் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, விஞ்ஞானி ஆர்.ராமானுஜம், பேராசிரியர் தயானந்தன், அரசியல் விமர்சகர் வே.மீனாட்சி சுந்தரம், அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் மணி ஆகியோர் பங்கேற்று அறிவியல் விழிப்புணர்வு குறித்துப் பேசினர். ஊரூர் குப்பம், ஆல்காட் குப்பம் ஊர் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இடதுசாரி இயக்க மூத்த தலைவர் என்.சங்கரய்யா காதல் திருமணத்துக்கு ஆதரவாக பேசியதையும், கிருஷ்ணன்கோவிலில் நடந்த சாதிமறுப்பு திருமண நிகழ்ச்சியையும் காணொளி காட்சி மூலம் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் சாதி, மதம் பார்க்காமல் திருமணம் செய்தவர்களுக்கு தனியார் மற்றும் பொதுத்துறையில் 10 சதவீத இடஒக்கீடு வழங்க வேண்டும். கவுரவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் பேசினர்.

கவிஞர் தமிழ்ஒளி கலைக் குழுவின் நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. நிகழ்வை வழக்கறிஞர் சுசீலா தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x