Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

ஆன்லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் இல்லை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். ஆன்லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்குஇல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில்அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம்அரசுக்கு அறவே இல்லை. கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்கள் வேறு தொழிலில் ஈடுபடுவதற்காக ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.

ரூ.4 கோடியில் பிரச்சாரம்

மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படும்.

உரிமங்கள் வழங்குதலில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும், உரிமங்களை புதுப்பித்தல், ஏற்றுமதி, இறக்குமதிக்கான அனுமதி ஆணைகள் வழங்குவதற்கான கால அவகாசத்தை குறைத்தல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் மேலும் 74 சேவைகளை இணையவழி மூலம் வழங்குவதற்காக மின் ஆளுமை நடவடிக்கைகள் மற்றும் கணினிமயமாக்கும் பணிகள் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள், 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம்25,009 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.15.01 கோடி நிதி கூடுதலாக செலவாகும்.

தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்குகாவல் துறை துணை கண்காணிப்பாளர் பணியிடம் ரூ.27 லட்சத்தில் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x