Published : 15 Feb 2016 05:10 PM
Last Updated : 15 Feb 2016 05:10 PM

மதவெறி சக்திகள் வன்முறை எல்லை மீறல்: ஜே.என்.யூ. விவகாரத்தில் வைகோ காட்டம்

மதவெறி சக்திகளின் வன்முறைகள் எல்லை மீறிக் கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காஷ்மீர் பிரச்சினை குறித்த விவாத நிகழ்ச்சி ஒன்றினை நடத்த டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியிருந்தது. இதில் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர், அப்சல் குரு நினைவு நாளையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியது. மேலும், நிகழ்ச்சி நடந்த போது, மின்சாரத்தை துண்டித்ததோடு, மாணவர்கள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தியது.

ஆனால், பாஜக எம்பி, மகேஷ் கிரி, டெல்லி வசந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் அளித்த பொய்ப் புகாரின் அடிப்படையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையகுமார் உட்பட ஐந்து பேர் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைக் கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்ற சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜாவின் மகள் உட்பட 20 மாணவர்கள் மீதும் பொய் வழக்குகள் பதியப்பட்டன. மேலும், 8 மாணவர்களைத் தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளனர்.

பொய் வழக்குகளை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி கூறியதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த இந்துத்துவவாதிகள், டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பாஜக ஆதரவுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதல், கருத்து உரிமைக்கு எதிரான தாக்குதலாகும். இது, இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த சம்மட்டி அடியாகும். மதவெறி சக்திகளின் வன்முறைகள் எல்லை மீறிக் கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x