Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

தமிழகத்தில் செப். 12-ம் தேதி 10 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி; 3-வது தவணை தடுப்பூசி போடும் திட்டம் தற்போது இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

தமிழகத்தில் 3-வது தவணை( பூஸ்டர்) தடுப்பூசி போடும் திட்டம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், வரும் 12-ம் தேதி 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

கரோனாவைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தடுப்பூசி மிகவும் அவசியமாகும்.

தற்போது 3.50 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டு தவணை போடப்பட்ட பிறகு, அதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஓராண்டுக்கு இருக்கும் என்று மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ அதிகாரி, செப்டம்பர் 20-ம் தேதி இரண்டு தவணை போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ அடிப்படையில் 3-வது தவணை தடுப்பூசி போடுவது தொடங்கும் என்றும்,இதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதியைப் பெற முயற்சிஎடுத்துவருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் 3-வது தவணைதடுப்பூசி போடுவதற்கான முயற்சிமேற்கொள்ளப்படுகிறதா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கரோனா தடுப்பூசியைப் பொருத்தவரை, மத்திய அரசு வழிகாட்டுதல்படி, தேசிய அளவில் நிதி ஆயோக் உறுப்பினர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு,எந்த சூழலிலும் 2-வது தவணைதடுப்பூசி போட்டவர்களுக்கு 3-வதுதவணை (பூஸ்டர்) தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு செயல்முறை எதையும் அளிக்கவில்லை.

மத்திய அரசு தொடங்கவில்லை

எனவே, 3-வது தவணை தடுப்பூசிபோடுவதை மத்திய அரசு எங்கும் தொடங்கவில்லை. அதுதான் தமிழகத்தின் நிலையும் ஆகும். ஒருவேளை உலக சுகாதார நிறுவனம் 3-வது தவணை தடுப்பூசி திட்டத்தை அங்கீகரித்தால், இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் அந்த திட்டத்தை தொடங்கும்.

மக்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார். இதனால், தமிழகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தடையின்றி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 19.22 லட்சம் தடுப்பூசிகள் நேற்று வந்தன.

கேரளாவில் தொற்று எண்ணிக்கை தினசரி 20 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கும் நிலையில், தமிழக - கேரள எல்லையோர மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வரலாற்றில் அதிகபட்சமாக செப். 4-ம் தேதி 6,20,255 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒரே நாளில் 20 லட்சத்தை தாண்டி தடுப்பூசி போடவேண்டும் என்பதால், வரும் 12-ம்தேதி கேரள எல்லையோர 9 மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்கள் ஒரே நாளில் 10 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x