Published : 07 Sep 2021 03:14 AM
Last Updated : 07 Sep 2021 03:14 AM

சென்னை புறநகரில் உள்ள ஊராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்து தேர்தல் நடத்த வலுக்கும் கோரிக்கை

தாம்பரம்

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது

இதில் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகள் தாம்பரத்துடன் இணைக்கப்பட உள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்படுவது உறுதியானது. ஆனால், எந்த ஊராட்சிகள் இணைக்கப்படும் என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவிவருகிறது. இந்நிலையில் மாநகராட்சியுடன் இணைய சம்மதம் தெரிவித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராம ஊராட்சிகள் தவிர்த்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம்உயர்த்தி தேர்தல் நடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கைவைத்துள்ளனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ கிராம ஊராட்சிகளையும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்து தாம்பரம் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

ஊராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்து தேர்தல் நடத்தினால் அரசுக்கு வருவாய் இழப்பு தவிர்க்கப்படும். மாறாக ஊராட்சிகளில் தேர்தல் நடத்தினால் பல லட்சம் செலவாகும். தற்போது அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், கிராம ஊராட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடத்துவதை தவிர்க்கலாம்.

மேலும் மாநகராட்சியாக தரம்உயர்வதால் பாதாள சாக்கடை திட்டம், சாலைகள், மெட்ரோ ரயில்திட்டங்களை விரைவாக செயல்படுத்த ஏதுவாக இருக்கும். மருத்துவமனைகளின் தரம் உயரும். துப்புரவு பணியாளர்கள் சம்பள உயர்வு, பணி உறுதிப்படுத்துதல், பூங்காக்கள் நவீனப்படுத்துதல் சாத்தியமாகும். உலக வங்கியில் இருந்து நிதி உதவி பெறலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x