Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மாவட்டங்களின் வேட்பாளர் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31-ம்தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in என்றஇணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள விவரங்களின்படி, இந்த மாவட்டங்களில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள், 835 திருநங்கைகள் என மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் உள்ளனர்.

ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வேட்பாளர்களுக்கான கையேடுகளை மாநிலதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் ஏ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்தலில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேர்தலை அசம்பாவிதம் இன்றி நடத்தி முடிக்க உதவுவது, வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x