Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

மத்திய பாஜக அரசைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்: வீடுகள் முன் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து வரும்20-ம் தேதி வீடுகள் முன்பு கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என்று திமுககூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள் ளன.

இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆகஸ்ட் 20-ம் தேதி காணொலிக் காட்சி மூலம், தேசிய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு,தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் மென்பொருள் மூலம்முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, நாடுமுழுவதும் செப்டம்பர் 20 முதல்30-ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்றுஒருமனதாகத் தீர்மானிக்கப்பட் டது.

அதன்படி, மத்திய அரசின் செயல்களைக் கண்டித்து, திமுகதலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும்.

திமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர், தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடியேந்தி, கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x