Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM

வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் - அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் புதிதாக துலுக்கர்பட்டி, வெம்பக்கோட்டை, பெரும்பாலை ஆகிய 3 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கலைமற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

75-வது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடும் வகையிலும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கிலும், தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளை 75 வீடியோக்களாக தயாரித்து, இணையவழியில் வெளியிட ரூ.1.64 கோடி ஒதுக்கப்படும். தமிழக பாரம்பரியக் கலைகள் இடம்பெறும் வகையில், தமிழர் திருநாளான பொங்கலன்று ஆண்டுதோறும் சென்னையில் பிரம்மாண்ட கலைவிழா (இணையவழி மூலமும்) நடத்தப்படும்.

இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில்கலைப் போட்டிகள், இளையோருக்கான மாநிலக் கலை விழா நடத்தப்படும்.

கலைமாமணி விருது பெற்ற, வறுமை நிலையில் வாழும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் ஒருமுறை வழங்கப்படும் பொற்கிழித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

அருங்காட்சியக விரிவாக்கம்

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தொல்பொருளியல் தொகுப்புக் காட்சிக்கூடங்களை விரிவுபடுத்த ரூ.22.81 கோடியில் புதியகட்டிடம் கட்டி, அரும் பொருட்கள்பன்னாட்டுத் தரத்தில் காட்சியமைக்கப்படும். சென்னை அரசு அருங்காட்சியக சிறுவர் அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை விளக்கும் வகையில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் 1909-ல் இந்தோ சார்சானிக் கட்டிடக் கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள, பாரம்பரிய வேலைப்பாடுகள் மிகுந்த தேசிய கலைக்கூடம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் கலை வடிவங்களின் மேல், லேசர் தொழில்நுட்ப 3-டி ஒலி ஒளி காட்சி அமைத்து, தமிழகத்தின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தகவல் அடங்கிய கண்கவர் நிகழ்ச்சிகள் ரூ.8 கோடியில் நடத்தப்படும்.

`அன்பில்' செப்பேடுகள்

சோழப் பேரரசின் மரபு மற்றும்தொன்மையை விளக்கும் `அன்பில்' செப்பேடுகளைக் கண்டுணர்ந்து, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். அதேபோல, தமிழகத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையிலான `லெய்டன்' செப்பேடுகளை, நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகத் தரம் வாய்ந்த கீழடிஅகழ்வைப்பகத்துக்குத் தேவையான 34 நிரந்தரப் பணியிடங்களை தோற்றுவித்தல் மற்றும் பராமரிப்புகளுக்காக ரூ.1.58 கோடி ஒதுக்கப்படும். மறுசீரமைக்கப்பட்ட தொல்லியல் நிறுவனத்தில், புதிதாக கல்வெட்டியலில் 2 ஆண்டு முதுநிலை பட்டய வகுப்பு தொடங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்தப்படும். தற்போது நடைபெற்று வரும் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வுகளுடன், புதிதாக திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய 3 இடங்களையும் சேர்த்து மொத்தம் 7 இடங்களில் அறிவியல் அடிப்படையில், அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். இவைதவிர, புதியகற்கால இடங்களைக் கண்டறிதல்,தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் இடங்களைஇனங்காணுதல் என்னும் இரண்டு அறிவியல் முறையிலான கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.

மதுரை மாவட்டம் முதலைக்குளம், அரிட்டாப்பட்டி, சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் தொண்டூர், நெகனூர்பட்டி ஆகிய 5 இடங்களில் உள்ள பண்டைய தமிழ்க் கல்வெட்டுகள், பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x