Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

கரோனா மீண்டும் கூடுவதால் அச்சப்படத் தேவையில்லை: கட்டுப்பாட்டுடன் இருக்க ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று 25-வது வாராந்திர கரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமை செயலர் அஸ்வனிகுமார் மற்றும் பல்வேறு துறை செயலர்கள், சுகாதாரத்துறை இயக்குநர், ஜிப்மர் இயக்குநர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழஙகினார்.

பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கரோனா கொஞ்சம் அதிகமாகியுள்ளது. கடந்த 2, 3 நாட்களாக புதுவையில் கரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது. இதற்காக யாரும் பயப்பட வேண்டாம். பொதுமக்ளுக்காக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மூன்றாவது அலைவந்தாலும் பயமின்றி இருக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இன்னும் தயக்கம் இருக்கிறது. இது தேவையில்லாதது. அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜிப்மரில் அனுமதிக்கப் பட்டவர்களில் 40 சதவீதம் பேர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். கரோனாவை அறிவியல் ரீதியில் நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். கட்டுப்பாடுடன் மக்கள் இருந்தால் பயப்பட தேவையில்லை என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணைநிலை ஆளுநர், “புதுச்சேரி சிறையில் கைதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர்பாக நான் நேரடியாக பதில் சொல்ல முடியாது. அந்தந்த துறை சார்ந்தவர்கள் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x