Published : 28 Feb 2016 03:14 PM
Last Updated : 28 Feb 2016 03:14 PM

ஆர்.கே.நகர் தொகுதியை வாழ்நாள் முழுவதும் நான் மறக்கமாட்டேன்: திட்டங்களை தொடங்கி வைத்து ஜெயலலிதா பேச்சு

ஆர்.கே.நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுவதும் நான் மறவேன். இத்தொகுதியைச் சார்ந்த மக்களும் எனது நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறீர்கள் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.180 கோடியே 41 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.193 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

''இன்று உங்களை எல்லாம் இங்கே சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இங்கே மட்டுமல்ல ஆர்.கே. நகர் தொகுதிக்குள் நான் நுழைந்தவுடன் வழிநெடுகிலும் இங்கே வந்து சேரும் வரை சாலையின் இருமருங்கிலும் இத்தொகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் சுட்டெரிக்கும் வெயிலில் என்னை வரவேற்க காத்திருந்ததை பார்க்கும் போது என் உள்ளம், என் நெஞ்சம் நெகிழ்ந்தது.

ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுவதும் நான் மறவேன். இத்தொகுதியைச் சார்ந்த மக்களும் எனது நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறீர்கள். என்னை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுத்து, முதலமைச்சராக ஆக்கிய இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை, துவக்கி வைத்ததிலும், 193 கோடியே 26 லட்சம்ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதிலும் நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற எனது தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தி வருகிறது. முதன்மைத் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை என ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி உள்ளது.

விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர், மற்றும் மாற்றுத் திறனாளிகள் என ஒவ்வொரு பிரிவினரின் வாழ்விலும் வளம் சேர்க்கும் விதமான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அனைவரும், அதிலும் குறிப்பாக, ஏழை எளியோர், ஒதுக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என விளிம்பு நிலையில் உள்ளோர் வாழ்வு வளம் பெற பல்வேறு நலத் திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அடித்தட்டில் உள்ள மக்கள் வாழ்வில் வளம் பெற இன்றியமையாதது மனித வள மேம்பாடு தான் என்பதால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதோடு; உடல் நலம் காப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பல மணி நேரம் மின் வெட்டு என்ற நிலையை மாற்றி, இன்றைக்கு மின் வெட்டே இல்லை என்ற நிலையை தமிழகத்தில் எனது அரசு ஏற்படுத்தி உள்ளது. எவ்வித அச்ச உணர்வுமின்றி மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம்-ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. பல்வேறு புதிய தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எண்ணிலா மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள், அம்மா சிமெண்ட் என எண்ணற்ற மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்களை நாடி அரசு என்பதற்கேற்ப, பொதுமக்களின் குறைகளை களைய அம்மா திட்டம் மற்றும் அம்மா சேவை மையம் ஆகியவவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த இனிய விழாவில் 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நான் துவக்கி வைத்துள்ளேன்.

சென்னை காசிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகம் 92 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. படகு அணையும் தளத்தை மறுசீரமைத்தல், அலை தடுப்புச் சுவர், மீன் இறங்கு தளம், குளிர் சாதன வசதிகளுடன் கூடிய மீன் ஏலக் கூடம், இரண்டு வலை பின்னும் கூடங்கள், சுகாதார வளாகம், சாலைகள் மற்றும் குடிநீர் வடிகால் வசதிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த, கத்திவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் காக்ரேன் பேசின் சாலை ரயில்வே சந்திப்பு கடவு எண்.1A-க்கு மாற்றாக 16 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மேம்பாலம் என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொருக்குப்பேட்டைப் பகுதியில் உள்ள சுமார் 5 லட்சம் பேர் பயனடைவார்கள்.

கொருக்குப்பேட்டை காரநேசன் நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், இன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை இரட்டைக்குழி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா 13 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவைச் சுற்றியுள்ள திலகர் நகர், சேனியம்மன் நகர், இரட்டைக் குழித் தெரு, அப்பாசாமி நகர், PWD குடியிருப்புகள், ஆகிய இடங்களில் வசிக்கும் 15,000 பேர் இதனால் பயன்பெறுவர்.

தண்டையார்பேட்டை ரயில்வே நிலையம் அருகில் ரயில்வே துறைக்குச் சொந்தமான 35,700 சதுர அடி நிலம், தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இதனால் நேரு நகர், குமரன் நகர், நேதாஜி நகர், பட்டேல் நகர், காரநேசன் நகர், காந்தி நகர், நெடுஞ்செழியன் நகர், துர்கா தேவி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 50,000 பேர் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த இடத்தினை ரயில்வே துறையிடம் இருந்து பெற்று 97 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில், அழகிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்று நான் திறந்து வைத்துள்ளேன்.

70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, கீழ் வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நேரு நகர் மற்றும் எழில் நகர் ஆகியவற்றை இணைக்கும் நடை மேம்பாலத்தை இன்று நான் திறந்து வைத்துள்ளேன். இதனால் இப்பகுதி மக்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை மாற்றப்பட்டுள்ளது.

பவர்குப்பம் பகுதியில் சிதிலமடைந்த குடிசைப் பகுதி மாற்று வாரிய வீடுகள், இடிக்கப்பட்டு 23 கோடியே, 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 556 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று நான் திறந்து வைத்துள்ளேன். இந்த திட்டப் பகுதியில் ஏற்கெனவே வசித்து வந்த 420 குடும்பங்களுக்கும், இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களுக்கும், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள குடிசைகளில், வசித்து வந்த 127 குடும்பங்களுக்கும் இதில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதே போன்று அரங்கநாதபுரம் திட்டப் பகுதியில் சிதிலமடைந்த, 360 குடிசைப் பகுதி மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 480 புதிய குடியிருப்புகள் 40 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.

இன்று நான் திறந்து வைத்துள்ள இந்த குடியிருப்புகள் இங்கு ஏற்கெனவே வசித்து வந்த 360 குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, மேலும், 120 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு வரும், நோயாளிகளின் நோயினை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு என கடந்த 5 ஆண்டுகளில் 968 கோடி ரூபாய் செலவில், புதிய மருத்துவ உபகரணங்கள், பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சின்ன ஸ்டான்லி மருத்துவமனை என்று அழைக்கப்படும் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனைக்கு 74 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி சேவை இன்று என்னால் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எடுக்கப்படும் எக்ஸ்ரே படங்கள், கணினியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது பார்த்துக் கொள்ள இயலும்.

சென்னை மாவட்டத்தில் இருந்த 5 வட்டங்கள் பிரிக்கப்பட்டு மேலும் 5 வட்டங்கள் உருவாக்க, நான் உத்தரவிட்டதன் அடிப்படையில், தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் 12.2.2014 முதல் சென்னை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் இயங்கி வருகிறது. தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 2 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் 12701.5 சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதனை நான் தற்போது திறந்து வைத்துள்ளேன்.

31.8.2015 அன்று தண்டையார்பேட்டை புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என, நான் சட்டப் பேரவையில் அறிவித்தேன். அதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தண்டையார்பேட்டை புதிய கோட்டத்தை இன்று நான் துவக்கி வைத்துள்ளேன்.

ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் மூன்று தொழில் பிரிவுகளுடன் கூடிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை நான் இன்று துவக்கி வைத்துள்ளேன். இத்தொழிற் பயிற்சி நிலையத்திற்கென சொந்தக் கட்டடம் கட்டும் வரையில் சென்னை நடுநிலைப் பள்ளியில் இது செயல்படும்.

41 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆர்.கே.நகர் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தினை இன்று நான் திறந்து வைத்துள்ளேன். மேலும், சுனாமி குடியிருப்புப் பகுதியில் 4 நியாய விலைக் கடைகள் மற்றும் தண்டையார்பேட்டை பகுதியில் 3 நியாய விலைக் கடைகள் என 37 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 நியாய விலைக் கடைகளையும் இன்று நான் திறந்து வைத்துள்ளேன்.

ஏழை, ஏளிய மக்கள் மினரல் வாட்டர் என சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறும் வகையில் அம்மா குடிநீர்த் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்த, நான் ஆணையிட்டிருந்தேன்.

முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 100 இடங்களில் குடிநீர் நிலையங்கள் அமைக்கப்படும் என நான் அறிவித்திருந்தேன். இன்று இந்த திட்டத்தை துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆர்.கே. நகர் பகுதியில் ஒரு குடிநீர் நிலையம் உள்ளிட்ட, 7 குடிநீர் நிலையங்களை, இன்று நான் திறந்து வைத்துள்ளேன்.

சென்னை மாநகரத்தில் சாதாரணப் பேருந்துகள் செல்ல இயலாத பகுதிகளில், உள்ள மக்கள் பயன்பெறும் வண்ணம் சிற்றுந்துகள் இயக்கும் ஒரு முன்னோடி திட்டத்தினை இந்தியாவிலேயே முதன் முறையாக, எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இன்று ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் கூடுதலாக இரண்டு சிற்றுந்து வழித்தடங்களை, துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரு தடங்களில் கூடுதலாக 5 சிற்றுந்துகள் இயக்கப்படும்.

தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவில் 100 கல்லூரி மாணவர்கள் தங்குவதற்கான பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி; புது வண்ணாரப் பேட்டையில், 24 காவலர் குடியிருப்புகள்; சென்னை வடகிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி; அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி; தண்டையார் பேட்டை ஜீவரத்தினம் சாலையில் அமைக்கப்படவுள்ள அம்மா மருந்தகம் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை; வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இரு வழிப் பாலம் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

மேலும், எண்ணூர் நெடுஞ்சாலை, ரயில்வே சந்தி கடவு எண் 2A மற்றும் மணலி சாலை ரயில்வே சந்தி கடவு எண் 2B-யை ஒருங்கிணைத்து அமைக்கப்படவுள்ள மேம்பாலம்; கொருக்குபேட்டை பாரதி நகரில் சுற்றுச்சூழல் பூங்கா; தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் சமுதாய நலக் கூடம்; தண்டையார்பேட்டை புஜ்ஜாம்மாள் தெருவில், சலவைத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள்; தண்டையார் பேட்டையில் வார்டு அலுவலகக் கட்டடம்; கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும், இணைப்புக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர் மற்றும் அணுகு சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளேன்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வடக்கு டெர்மினல் சாலை முதல், அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெரு வரை மற்றும் காமராஜர் சாலையில் இளையா தெரு முதல் அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெரு வரை மழைநீர் வடிகால் ஆகிய பணிகள், 193 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். இந்த விழாவில் இப்பணிகளுக்கான அடிக்கற்களை நாட்டியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இனிய விழாவில் அம்மா சிறு வணிகக் கடன் உதவித் திட்டம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், திருமண உதவித் திட்டம், நலிந்தோர் உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 707 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தற்போது நான் துவக்கி வைத்த அடுக்குமாடி குடியிருப்பு வசதித் திட்டத்தின் கீழ் 1,036 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 63 மாணாக்கர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் மற்றும் 800 குடும்பங்களுக்கு அம்மா குடிநீர் திட்ட ஸ்மார்ட் கார்டு ஆகியவையும் இன்று வழங்கப்படுகின்றன. இவற்றை வழங்கும் அடையாளமாக 14 பயனாளிகளுக்கு நான் இந்த மேடையில் திட்ட உதவிகளை வழங்க உள்ளேன். மற்றவர்களுக்கு அரசு அதிகாரிகள் இன்றே வழங்குவார்கள்.

நலத் திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் இவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x