Published : 07 Feb 2016 10:40 AM
Last Updated : 07 Feb 2016 10:40 AM

7 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு: இந்திய பாசுமதி அரிசிக்கு 4 வாரத்துக்குள் புவிசார் குறியீடு வழங்கவேண்டும் - சென்னை அறிவுசார் சொத்துரிமை வாரியம் உத்தரவு

இந்திய பாசுமதி அரிசிக்கு 4 வாரத் துக்குள் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு புவிசார் குறியீடு பதிவாளருக்கு சென்னை அறிவுசார் சொத்துரிமை மேல்முறை யீட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத் துள்ள இந்த உத்தரவால், இந்திய பாசுமதி விவசாயிகள், ஏற்றுமதி யாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இமயமலையை ஒட்டிய சில மாநிலங்களில் விளையும் ஒருவித நறுமணத்துடன் கூடிய நீளமான அரிசி ‘பாசுமதி’ அரிசி எனப்படு கிறது. இந்தியாவில் பல நூற்றாண்டு களுக்கு முன்பிருந்தே இது விளை விக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இது இந்தியாவின் பாரம்பரிய சொத்து என்பதால், இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் விளையும் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு கேட்டு, புவிசார் குறியீட்டு பதிவகத்தில், மத்திய அரசு நிறுவனமான வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் விண்ணப்பித்தது.

இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் மத்தியப் பிரதேச மாநிலத்தையும் இந்த பட்டியலில் சேர்க்குமாறு புவிசார் குறியீடு பதிவகத்தில் முறையீடு செய்தனர். ராஜஸ்தான், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இத்தகைய மனுக்கள் வந்தன.

இதையடுத்து, புவிசார் குறியீட் டுக்காக மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், பிஹார் உட்பட பாசுமதி அரிசி விளையும் அனைத்து பகுதிகளை யும் உள்ளடக்கி புதிய மனு தாக்கல் செய்யுமாறு வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துக்கு புவிசார் குறியீடு பதிவகம் கடந்த 2013 டிசம்பரில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரியத்தில் வேளாண் பொருள் மேம்பாட்டு ஆணையம் மேல்முறையீடு செய்தது. மத்தியப் பிரதேசத்தின் நியூ தர்பன் சமூகநல கூட்டுறவு அமைப்பு சார்பில் தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி ஆஜராகி, ‘பாசுமதி அரிசி விளையும் மாநிலங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தையும் சேர்க்க வேண்டும்’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைவர் நீதிபதி கே.என்.பாட்சா, தொழில்நுட்ப உறுப்பினர் சஞ்சீவ் குமார் சாஸ்வால் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இமயமலை அடிவாரத்தில் சிந்து கங்கை சமவெளியில் உள்ள பஞ்சாப், அரியாணா, இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மற்றும் கத்வா ஆகிய மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசிக்கு 4 வாரத்துக்குள் புவிசார் குறியீட்டை புவிசார் குறியீட்டு பதிவாளர் வழங்க வேண்டும்.

மேலும், பாசுமதி அரிசி விளை யும் மாநிலங்களின் பட்டியலில் தங்களையும் சேர்க்கக் கோரி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உதவி பதிவாளர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் மனு தள்ளுபடி

முன்னதாக, இந்திய பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்குவதை எதிர்த்து, பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்த ‘பாசுமதி விளைவிப்போர் சங்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்க இருக்கிறது. இது இந்திய பாசுமதி அரிசி விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x