Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

தவணை முறையில் வீடுகள் விற்கும் திட்டம் அறிமுகம்: பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது, உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்து சாமி பேசியதாவது:

சுயநிதி திட்டத்தின் கீழ் சென்னை பாடிக்குப்பத்தில் ரூ.62.77 கோடியில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள், அயனாவரத்தில் ரூ.86.31 கோடியில் 216 குடியிருப்புகள், ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகரில் ரூ.40.60 கோடியில் 108 குடியிருப்புகள் கட்டப்படும்.

அம்பத்தூரில் ரூ.8.87 கோடியில் 151 மனைகள், சோழிங்கநல்லூரில் ரூ.4.75 கோடியில் 117 மனைகள், ஆவடியில் ரூ.1.74 கோடியில் 45 மனைகள், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூ.8.50 கோடியில் 306 மனைகள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.4 கோடியில் 82 மனைகள், ஓசூரில் ரூ.4 கோடியில் 54 மனைகள், மதுரை மாவட்டம் தத்தநேரியில் ரூ.2.40 கோடியில் 119 மனைகள் மேம்படுத்தப்படும்.

ஓசூரில் ரூ.25 கோடியிலும், மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.23.20 கோடியிலும் வணிக வளாகம் கட்டப்படும். சென்னை லாயிட்ஸ் காலனியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ரூ.451 கோடியில் மறுமேம்பாடு செய்யப்படும்.

வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் இருந்து உருவாகும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக `மூலதன நிதி' உருவாக்கப்படும்.

பொதுமக்கள் தொடர்புடைய வாரிய ஒதுக்கீட்டு ஆணை, குத்தகை ஒப்பந்தம் மற்றும் விற்பனைப் பத்திரம் ஆகியவை தமிழில் வழங்கப்படும். தகுதிவாய்ந்த 3-ம் தரப்புகண்காணிப்புக் குழு மூலம் வீட்டு வசதி வாரியக் கட்டிடங்களின் உறுதித்தன்மையும், தொழில்நுட் பமும் உறுதிப்படுத்தப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய், மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குபவர்களின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில், தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தும்.

விற்பனையாகாத வீடுகள்

தேவையில்லாத இடத்தில், தரமற்ற வீடுகளாக கட்டியதால் 6,900 வீடுகள் விற்காமல் உள்ளன. எனவே, வீடுகள் இனி தரமானதாகக் கட்டப்படும். ஏற்கெனவே தவணை முறையில் வீடுகள் விற்றபோதும், இன்னமும் 1,078 வீடுகள் விற்காமல் உள்ளன.

சோளிங்கர், வடலூர், திருக்கோவிலூர் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆகிய நகரங்களுக்கு முழுமைத் திட்டங்கள் (Master Plans) தயாரிக்கப்படும். மயிலாடுதுறையில் மாவட்ட நகர் ஊரமைப்புஅலுவலகம் அமைக்கப்படும். 18 மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்துக்கு ரூ.60 கோடியில் அலுவலகங்கள் கட்டப்படும்.

பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகள், அரக்கோணத்தை உள்ளடக்கி சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கப்படும்.

மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான வெளிவட்டச் சாலை அமைந்துள்ள நிலத்தில், ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும். அங்கு உணவகம் மற்றும் இரவு தங்கும் விடுதி ஆகியவை ரூ.2 கோடி மதிப்பில் அக்டோபருக்குள் கட்டி முடிக்கப்படும்.

பழைய மகாபலிபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரைச் சாலையையும் இணைக்கும் வகையில், ஒக்கியம் துறைப்பாக்கம் கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்துக்கும் இடையே ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தி, பக்கிங்காம் கால்வாய் மீது ரூ.180 கோடியில் உயர்மட்ட சுழற்சாலை மேம்பாலம் கட்டப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) தகவல் தொழில்நுட்ப சேவைகள் ரூ.4 கோடியில் செயல்படுத்தப்படும்.

பட்டினப்பாக்கத்தில் 25.16 ஏக்கரில் பெரிய வணிக வளாகம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும். எல்ஐசி போன்று சென்னையின் அடையாளமாக அது உருவாக்கப் படும்.

வீட்டு வசதி வாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிஒப்படைக்கப்பட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான வீடுகள்எப்போது இடிந்துவிழுமோ என்றநிலையில் இருக்கின்றன. குறிப்பாக, கோவை சிங்காநல்லூரில் 15 ஏக்கரில் 960 வீடுகள் கொண்ட வளாகம் இடியும் நிலையில் இருக்கிறது.

இதேபோல, பெசன்ட் நகர்,அண்ணா நகர் மேற்கு போன்றபகுதிகளில் 100-க்கும் மேற்பட்டகட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளன. இந்த வீடுகளைஇடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை கட்ட வீட்டு வசதி சங்கத்தினருடன் சேர்ந்து முயற்சிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x