Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பியோட்டம்: 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டை

இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ்

திருச்சி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பினார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் இலங்கை, பங்களாதேஷ், ரஷ்யா, நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 115 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது பல்கேரியாவைச் சேர்ந்த இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் (55) என்பவரைக் காணவில்லை. அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகளை அறுத்து, அதன் வழியாக அவர் தப்பியது தெரியவந்தது.

தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் அருண், துணை ஆணையர் சக்திவேல் (சட்டம், ஒழுங்கு), கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் அறைக்குஅருகில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து சிறப்பு முகாம் தனித்துணை ஆட்சியர் ஜமுனாராணி அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தப்பி 2 நாட்கள் இருக்கலாம்

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பண மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் கடந்த 2019 முதல் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ்க்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இது வழக்கமான சிறை போல இருக்காமல், முகாமாக அமைந்திருப்பதால் வருவாய்த் துறையினர் எப்போதாவதுதான் கணக்கெடுப்பு நடத்தி வந்துள்ளனர். தற்போது இங்குள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவந்ததால், அவர்கள் மீதே அதிகாரிகளின் கவனம் இருந்து வந்தது.

இந்த சூழலில் சிறப்பு முகாமில் இருந்து இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் தப்பிச் சென்றுள்ளார். அவர் இங்கிருந்து தப்பிச் சென்று 2 நாட்கள் ஆகியிருக்கலாம் எனசந்தேகம் எழுவதால், நாட்டிலுள்ள அனைத்து விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள், எல்லைப் பாதுகாப்பு படைகளுக்கும் இதுகுறித்த விவரம் அனுப்பிவைக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. மேலும் அனைத்து மாநில காவல் துறையினருக்கும் இதுகுறித்த விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியவரை கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், தயாளன், நிக்சன்உள்ளிட்டோரைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக சிறப்பு முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முதலணியின் அதிகாரிகள், காவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த நைஜீரியாவைச் சேர்ந்த ஸ்டீபன் பால் ஜான் அபுச்சி என்பவர் 2019-ல் சுமார் 25 அடி உயரமதில் மீது ஏறி குதித்து தப்பினார். பின்னர், அவரை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x