Published : 01 Sep 2021 03:17 AM
Last Updated : 01 Sep 2021 03:17 AM

மானாவாரி பயிர்களை காக்கும் பாட்டில்கள்: விவசாயிகளின் வேதனையும், நெகிழ்ச்சியும்

தருமபுரி மாவட்ட மானாவாரி நில பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து காலி மதுபாட்டில்கள் தான் காப்பாற்றுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் 7 வட்டங் களிலும் கணிசமான அளவில் வனப்பகுதி உள்ளது. வனத்தை ஒட்டி விளைநிலங்களும் உள்ளன. மாவட்டம் முழுக்க உள்ள வனத்தில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்கின்றன. வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் நிலக்கடலை, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, பாசிப்பயிறு, உளுந்து, மரவள்ளி போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் அறுவடை செய்து முடிக்கும் வரை வயலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தவறினால், விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள், குறிப்பாக இரவு நேரங்களில் நுழைந்து பயிர்களை பெருமளவில் சேதப்படுத்து கின்றன.

வயலைச் சுற்றி கட்டுக்கம்பிகளை தற்காலிக வேலிபோல் இழுத்துக் கட்டியும், பழைய புடவை களை வயலைச் சுற்றி கட்டிவைத்தும் காட்டுப்பன்றி களிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் முயற்சிக்கின்றனர்.

அவற்றையும் மீறி பன்றிகள் நிலங்களுக்குள் நுழைவதால் அவற்றை தடுக்க தற்போது காலி மதுபாட்டில்களை ஓசை எழுப்பும் வகையில் வயல்களை சுற்றியுள்ள மரங்களில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

இதுகுறித்து, பென்னாகரம் வட்டம் பருவதன அள்ளி ஊராட்சி காட்டு நாயக்கன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளியப்பன் கூறியது:

விளைநிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காக்க காவலில் ஈடுபடுவது சிரமமான காரியமாக உள்ளது. அப்படியே காவல் நின்றாலும் வயலின் ஒரு மூலையில் விவசாயி நின்றால் மற்றொரு மூலையில் பன்றிகள் நுழைந்து விடுகின்றன. இதுதவிர, வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங் களில் கொடிய விஷத் தன்மை கொண்ட பாம்புகள் சாதாரணமாக திரிகின்றன. பன்றிகளிடம் இருந்து பயிர்களையும் காக்க வேண்டும், என்பதற்காக காலி மதுபாட்டில் களைக் கொண்டு ஓசை உருவாக்கி பன்றிகள் நடமாட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்துகிறோம்.

ஒரு மரத்தில் 1 ஜோடி காலி மதுபாட்டில்கள் வீதம் ஆங்காங்கே கட்டி தொங்க விடுகிறோம்.

அதையொட்டியே சிறிய இரும்பு துண்டு, பழைய ஸ்பேனர், சிறிய கல் போன்ற ஒன்றையும் தொங்க விடுகிறோம். காற்றால் பாட்டில் அசையும்போது இரும்புத்துண்டு அதன்மீது மோதி ஓசை உருவாகும். இரவுமுழுக்க தொடரும் இந்த ஓசையால் பன்றிகள் ஓரளவு கட்டுப்படுகின்றன. பொது இடங்களில் வீசப்பட்டிருக்கும் காலி மதுபாட்டில்கள் தான் ஏழை விவசாயிகளின் நிலங்களில் உள்ள பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தற்போது உதவி வருகிறது. சிலர் பழைய எவர்சில்வர் தட்டு போன்றவற்றையும் இவ்வாறு தொங்க விடுகின்றனர்.

வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடையும் வேதனை விவசாயிகளுக்கு நிரந்தரமாகி விட்டபோதும், இப்பிரச்சினைக்கு தற்காலிக மற்றும் குறைந்தபட்ச தீர்வாக இருந்து விவசாயிகளுக்கு காலி மதுபாட்டில்கள் உதவிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x