Published : 13 Feb 2016 09:08 AM
Last Updated : 13 Feb 2016 09:08 AM

தேர்தல் பிரச்சார களத்தை கலக்கப்போகும் வழக்குகள்: லாவணி பாடத் தயாராகும் தலைவர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் அதை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் விநியோகம், தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார யுக்தி, மக்களைக் கவரும் திட்டங்கள் குறித்த ஆலோசனை என அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதனால் தேர்தல் களமும் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் வழக்குகளை, எதிர்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் முக்கிய அஸ்திரமாக பயன்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சிகர்கள் கூறுகின்றனர். அதற்கு வசதியாக முக்கியக் கட்சிகள் ஒவ்வொன்றும் மற்ற கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் மீதான வழக்கு விவரங்களை தூசி தட்டி சேகரித்து வருகின்றன. தேர்தல் பிரசாரத்தில் ஒவ்வொருவர் மீதும் உள்ள வழக்குகளை முன்நிறுத்தி பரஸ்பர குற்றச்சாட்டு சொல்லவும் தயாராகி வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுக்கு எதிராக, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தில் இந்த வழக்கு குறித்த விவாதம் தீவிரமாக எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

கனிமொழி, ஆ.ராசா

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இவ்வழக்கை அதிமுக முக்கிய அஸ்திரமாக பயன்படுத்திய நிலையில் தற்போதய தேர்தலிலும் அதிமுக பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

திமுகவினர் மீதான இதர வழக்குகள்

தயாநிதிமாறன்:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை கட்டாயப்படுத்தி, அந்நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க நெருக்கடி கொடுத்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு:

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1996-2001-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, திருச்சி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக நிலம் அபகரித்ததாக வழக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது சுமார் ரூ.33 லட்சத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக வழக்கு, இதுதவிர தஞ்சாவூரில் 8 மாடிக் கட்டிடத்தை அபகரித்ததாகவும், திருச்சி மத்திய சிறையில் பணிபுரியும் காவலர் வீரமணியை தாக்கியதாகவும் கே.என்.நேரு மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன்:

திமுக அமைச்சராக சுரேஷ்ராஜன் இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 14 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 439 ரூபாய் சொத்து குவித்ததாக கன்னியாகுமரி மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் சுரேஷ்ராஜனின் தாய், தந்தை, மனைவி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர். சுரேஷ்ராஜனின் தந்தை நீலகண்ட பிள்ளை அண்மையில் காலமாகிவிட்டார்.

தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி:

தூத்துக்குடி எம்எல்ஏவாக இருந்த என்.பெரியசாமி, 1996-2001-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் சொத்து சேர்த்ததாக 2002-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், பெரியசாமியின் மனைவி, அவரது மகளும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் உள்ளிட்டோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில், இறுதிக்கட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் அமைச்சர் பொன்முடி:

விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி அவரது மகன் உட்பட 7 பேர் மீதான வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக பொன்முடியின் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் விசாரணை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரது ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி:

முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, பொங்கலூர் பகுதியில் நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், அவரது மகன் பாரி, மருமகனும் கட்சியின் மாநகர துணை செயலாளருமான ஆனந்த் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி:

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 70 லட்சம் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2012-ம் ஆண்டு மே மாதம் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து திமுக ஆட்சியில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அங்கு வழக்கு நிலுவையில் உள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்:

இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 10 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிவகங்கை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

சொத்து குவித்த இதர திமுக முன்னாள் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தமிழரசி உள்ளிட்டோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகள் சிலவற்றில் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த 1991-96ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர்களான எம்ஆர்கே.பன்னீர்செல்வம், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகளில், அந்தந்த மாவட்ட நீதிமன்றங்கள் ஏற்கெனவே இவர்களை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து ஊழல் தடுப்பு போலீஸார் தாமதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகின்றன.

மு.க.அழகிரி மீது உள்ள வழக்குகள்

இதுதவிர, கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காட்டூரில் மு.க.அழகிரிக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனது வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்து விட்டார் என தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அப்போது மதுரை ஆட்சியராக இருந்த சுப்ரமணியம், அழகிரி மீது மதுரை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதேபோல் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது மேலூர் தொகுதியில் தேர்தல் பார்வையாளராக இருந்த தாசில்தார் காளிமுத்துவை மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 21 பேர் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. சிவரக்கோட்டையில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி நிர்வாகம் கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததாக அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது கடந்த 2012-ல் தொடரப்பட்ட கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.

அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் திமுக தலைவரின் மகன் என்பதாலும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதும் சேர்த்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என கூறப்படுகிறது. எனவே அவர் மீதான வழக்குகளும் தேர்தல் பிரச்சாரங்களில் எதிரொலிக்கும் என தெரிகிறது.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு:

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் இந்த கொலை வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அதிருப்தியடைந்த ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீஸுக்கு வழக்கை துப்புத்துலக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. சிபிசிஐடி-யின் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் விசாரித்தபோதும் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதைக்கூட இதுவரை மோப்பம் பிடிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணப்படும் நிலை குறித்து விமரிசிக்க தேர்தல் சமயத்தில் திமுக வீசும் அணு குண்டாக இந்த வழக்கு பயன்படுத்தப்படலாம்.

அன்புமணி ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர்

அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக அன்புமணி மற்றும் 9 பேர் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில், மோசடி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு விசாரணை வரும் மார்ச் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் 11 கிரானைட் குவாரிகளில் அனுமதி இல்லாமல் அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி எடுத்தது, மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை ஆணை பெற்றுள்ளார். இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

மேலும், பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் பழனி கொலை வழக்கில் எம்எல்ஏ ராமச்சந்திரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தால் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதால் இவ்வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கொலையுண்ட பழனியின் மகன் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இவை உள்பட ராமச்சந்திரன் மீது 10-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்

கடந்த 2011-ம் ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி, நெடுஞ்சேரி ஆகிய ஊர்களில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நாம் தமிழர் கட்சி சீமான்

2000-ம் ஆண்டில் ராமேசுவரத்தில் இலங்கை தமிழருக்காக திரைத்துறையினர் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான் மற்றும் இயக்குநர் அமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இப்படி கட்சித் தலைவர்கள், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மீது சொத்து குவிப்பு, நில அபகரிப்பு, தேர்தல் முறைகேடு, கிரிமினல் வழக்கு என பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த கட்சிகள் முனைப்பு காட்டும்.

அதிமுகவினர் மீதான முக்கிய வழக்குகள்

முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி:

திருச்சி குமரன் நகரில் வசிக்கும் டாக்டர் ராணியை 2-வதாக திருமணம் செய்து, பணம், நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக அவர் தொடர்ந்த வழக்கை பரஞ்சோதி எதிர்கொண்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி:

திருநெல்வேலியைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கடந்தாண்டு பிப்.20-ல் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர்தான் காரணம் என கூறப்பட்ட புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு விசாரணை இன்னமும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா:

கைலாசநாதர் கோவில் பூசாரி தற்கொலை வழக்கில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவரும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்கு வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

நாளிதழ் அலுவலகம் எரிப்பு, 3 பேர் கொலை வழக்கு

திமுகவில் யாருக்கு செல்வாக்கு? என்பது தொடர்பாக வெளியான கருத்துக் கணிப்பு தொடர்பாக அக்கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு குறித்து விமரிசிக்க அதிமுக வீசும் ஏவுகணைகளில் ஒன்றாக இந்த வழக்கு இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x