Published : 31 Aug 2021 01:19 PM
Last Updated : 31 Aug 2021 01:19 PM

உரமில்லை, நெல் கொள்முதல் இல்லை: விவசாயிகள் வேதனைக்கு விடிவு எப்போது?- மநீம கேள்வி

சென்னை

வளரும் பயிருக்கு உரமில்லை. அறுவடையான நெல் கொள்முதல் இல்லை என்ற சூழலில் விவசாயிகள் வேதனைக்கு விடிவு எப்போது என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாயிகள் நல அணி மாநிலச் செயலாளர் மயில்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''திமுக அரசு எப்போதும் இல்லாத வகையில் வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபோது, அது மக்கள் நீதி மய்யம் கட்சியாலும், கட்சித் தலைவர் கமல்ஹாசனாலும் முழு மனதோடு பாராட்டப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக நாம் அறியும் தகவல்கள் இதற்கு முரணாகவும், வேதனையூட்டுவதாகவும் இருக்கின்றன.

வயலில் வளர்ந்து நிற்கும் பயிர்களுக்குச் சரியான நேரத்தில் உரமிட வழியில்லாமல் விவசாயிகள் தமிழகமெங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அறுவடையான நெல்லைக் கொள்முதல் செய்வதில் அரசு ஆர்வம் காட்டாததால் மயிலாடுதுறை பகுதியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இதைவிடக் கொடுமை தேனி பகுதியில் அரசு கொள்முதல் செய்த நெல்லைச் சரியாகப் பாதுகாக்காமல் மழையில் நனையவிட்டு அது முளைத்துக் கிடக்கும் அவல நிலை.

திமுக அரசு விவசாயிகள் பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்தும் நோக்கில்தான் வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறது என்று நினைத்தோம். அது வெறும் ஏட்டுச் சுரைக்காய், கறிக்கு உதவாது என்பது இப்போது தெரிகிறது.

எனவே ஆளும் திமுக அரசு விவசாயிகள் மீது உண்மையான அக்கறையோடு, உரத் தட்டுப்பாட்டை நீக்கியும், விளைந்த நெல்லைக் கொள்முதல் செய்தும் அவர்கள் கண்ணீரைத் துடைக்க வேண்டும்''.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x