Published : 28 Feb 2016 05:20 PM
Last Updated : 28 Feb 2016 05:20 PM

அதிமுக அரசின் கடைசி நேர பணி நியமனங்கள் சந்தேகங்களுக்கு வலு சேர்க்கின்றன: ஸ்டாலின்

அரசு பணியிடங்கள் பலவற்றிலும் முறைகேடான நியமனங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு தனது ஆட்சி போகும் நேரத்தில் வேக வேகமாக செய்து வருகிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக இளைஞர்களில் 86 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு பணியிடங்கள் பலவற்றிலும் முறைகேடான நியமனங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு தனது ஆட்சி போகும் நேரத்தில் வேக வேகமாக செய்து வருகிறது. வெளிப்படைத் தன்மை இல்லாத இந்த நியமனங்களில் முறைகேடுகள் தாண்டவமாடுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

பல்லைக்கழகத் துணை வேந்தர் நியமனங்கள், கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்கள் உள்பட பலவற்றிலும் முறைகேடுகளைக் கண்டித்து அந்தந்த நிறுவனங்களைச் சேர்ந்த சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழ்நாடு அரசு பொது தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினர்கள் நியமனத்தில் அண்மையில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளை தமிழ்நாடு அறியும். அதிமுக வழக்கறிஞர்கள் உள்பட ஆளுங்கட்சியினர் வெளிப்படையாகவே நியமிக்கப்பட்டார்கள்.

அரசாங்கத்தில் எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குரிய தகுதிகளுடன் விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களைத் தவிர்த்து, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கும் சந்தேகங்களுக்கும் வலு சேர்க்கும் வகையில் பிப்ரவரி 26-ம் தேதி செய்தி- மக்கள் தொடர்புத் துறையில் 40 உதவி மக்கள் தொடர்பு அதிகரிகள் பணி நியமனம் நடந்துள்ளது. இந்த 40 பேரில் ஒருவர் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வளர்மதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கே இப்பணி என்ற அடிப்படையில், ஒரு பதவிக்கு தலா 20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதகாக அந்தக் கட்சியினரே தெரிவிக்கக் கூடிய அவல நிலை உருவாகியுள்ளது.

ஆட்சி முடியப் போகிறது என்றதும் அவசர அவசரமான முறையிலே அரைகுறை திட்டங்களைத் தொடங்கி வைப்பது போலவே, கடைசி நேர லஞ்சத் தாண்டவமும் தலைவிரித்தாடுகிறது. இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும் எனக் காத்திருப்போம்.

கழக அரசு அமைந்தவுடன் இவைகுறித்து, முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்தும் சட்டப்படி மறுபரிசீலனைக்குட்படுத்தப்படும் என்றும்; உரிய தகுதி உடையவர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, பணி நியமனங்கள் நடைபெறும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x