Last Updated : 28 Aug, 2021 12:28 PM

 

Published : 28 Aug 2021 12:28 PM
Last Updated : 28 Aug 2021 12:28 PM

அரியலூர் அருகே இடம் கையகப்படுத்தும் விவகாரம்: 4 பெண்கள் உட்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்

அரியலூர் அருகே ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கத் தனி நபர்களிடம் இடம் கையகப்படுத்த அரசு அதிகாரிகள், காவல்துறையினர் இன்று (ஆக 28) சென்ற நிலையில், இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆதிச்சனூர் கிராமத்தில் உள்ள 4 நபர்களிடம் இருந்து, சுமார் இரண்டரை ஏக்கர் இடத்தினைக் கடந்த 1996-ம் ஆண்டு அரசு விலைக்கு வாங்கியது. அந்த இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிடசமுதாய மக்கள் 66 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, இடத்தின் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு பணம் செலுத்தியது.

ஆனால், இடத்தின் உரிமையாளர்கள் இடத்தினைத் தரமுடியாது என அப்போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வெளியானதால், நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கிலும் கடந்த 2018-ம் ஆண்டு அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில், இன்று நிலத்தினை அளவீடு செய்து, ஆதி திராவிட மக்களுக்கு வழங்கக் காவல் துறையினருடன், வருவாய்த் துறையினர் ஆதிச்சனூர் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு கிராமம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, இடம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

அப்போது, இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களான செல்வம் (28), பிரியா (32), மேகலா (35), மீனாட்சி (30), வேம்பு (45) ஆகியோர், ’நிலத்தை அளவீடு செய்யக்கூடாது. அரசு வழங்கிய தொகை குறைவாக உள்ளது. தற்போது உள்ள மதிப்பீட்டைக் கணக்கிட்டுப் பணம் தரவேண்டும்’ எனக் கூறி தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அந்த 5 நபர்களின் மீதும் தண்ணீரை ஊற்றி, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x