Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

கரோனா பரிசோதனை உபகரணங்கள் வீணடிக்கப்பட்ட விவகாரம்- செங்கை மருத்துவமனையில் மருத்துவ கல்வி இயக்குநர் ஆய்வு: நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த சிலர் மீது துறைரீதியான நடவடிக்கை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பல கோடி மதிப்புள்ள கரோனா பரிசோதனை உபகரணங்கள் (ஆர்.டி.பி.சி.ஆர்.) பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த சிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. கரோனா உச்சத்தில் இருந்தபோது இந்த பரிசோதனை மையத்துக்கு அதிக அளவில் பரிசோதனை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனை உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் அதிக அளவில் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக தேவைக்கு அதிகமான மருத்துவப் பொருட்கள் மருத்துவமனையில் கையிருப்பில் இருந்தால் அவற்றை கவனிக்கும் துறையினர்,

முறைப்படி தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பொருட்கள் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும். ஆனால், கரோனா பரிசோதனைக் கருவிகள்அதிகமாக இருந்தும் முறையான தகவல் தெரிவிக்காத காரணத்தால் அவற்றில் பல, பயன்படுத்தப்படாமலேயே காலாவதி ஆகியுள்ளதாகத் தெரிகிறது. இதன் மதிப்பு பல கோடி இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் மூலம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி கடந்த ஆக. 19-ம் தேதி கரோனா பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறையை வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சீல் வைத்தனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயரதிகாரிகளுக்கு, விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையிலான ஆய்வுக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது நுண்ணுயிரியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ள காலாவதியாகாத கரோனாபரிசோதனை கருவிகளை (ஆர்.டி.பி.சி.ஆர்.)பயன்பாட்டுக்காக வெளியில் எடுத்துள்ளனர். காலாவதியான கருவிகளை ஆய்வகத்தின் அறையிலேயே வைத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் கேட்டபோது, “கரோனா பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையில் காலாவதியாகாத உபகரணங்கள் பல உள்ளன. பயன்பாட்டுக்கு கொண்டுவர அவற்றை வெளியில் எடுத்துள்ளோம். அவற்றைமருத்துவப் பணிகள் சேவைக் கழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அவை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பப்படும். காலாவாதியான பரிசோதனை உபகரணங்களை, அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு திரும்ப அனுப்பி, வேறு பெற உள்ளோம். பணம் எதுவும் கூடுதலாக செலுத்தாமல் வேறு உபகரணங்களை பெற வழியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x