Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் மூலமாக நில அளவீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தல்

சென்னை

அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் மூலமாக நில அளவீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இணை ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கோயில் நிலங்களைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜிஐஎஸ் மேப்பிங் பணியை மேற்கொள்ள அரசு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரால் வழங்கப்பட்ட கருத்துரையில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்களைக் கொண்டு அனைத்துநில அளவைப் பணிகளும் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நில அளவீட்டுப் பணியை விரைவில் முடிக்க ஏதுவாக, அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் மண்டலந்தோறும் விரைவில் அனுப்பிவைக்கப்பட உள்ளனர். இப்பணியை விரைந்துமுடிக்க, தங்களது மண்டலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நில அளவர்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த கோயில்களில் மற்றும் எந்தந்த நாட்களில் பணி மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான செயல்முறை உத்தரவு மண்டல இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு, அதன் நகலை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் உடனடியாக பணியைத் தொடங்க ஏதுவாக கோயில் நில ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு உதவியாக மூன்று உதவியாளர்களை தினக்கூலி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்படும் புல உதவியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை, அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

நிதி வசதி இல்லாத கோயில்கள் இப்பணியை மேற்கொள்ள, நிதி வசதிமிக்க கோயில் மூலம் ஊதியம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் கோயில் நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்து, எல்லைக் கற்கள் நட்டு, ரோவர் உபகரணத்தைப் பயன்படுத்தி அதற்கான வரைபடத்தை தயார் செய்ய வேண்டும்.

முடிக்கப்பட்ட நில அளவைப் பணிகள் தொடர்பான விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x