Published : 24 Feb 2016 10:14 AM
Last Updated : 24 Feb 2016 10:14 AM

மகாமக விழா துளிகள்: மகாமகக் குளத்தில் இனி பகலில் மட்டுமே நீராடலாம்’

‘மகாமகக் குளத்தில் இனி பகலில் மட்டுமே நீராடலாம்’

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் கூறியதாவது: மகாமகப் பெருவிழா சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்துத் துறை அதிகாரிகள், காவல் துறையினர், அவ்வப்போது சிறு சிறு குறைகளை எடுத்துரைத்த ஊடகத்தினர், ஒத்துழைப்பு நல்கிய உள்ளூர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி.

பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இனி பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராடலாம் என்றார் ஆட்சியர்.

“பாலித்தீன் பைகளை தவிர்ப்பதற்காக ‘மாசில்லா மகாமகம்; குப்பையில்லா கும்பகோணம்’ என்ற ஸ்லோகனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பிரச்சாரங்களை செய்தோம். இதனால் ஓரளவுக்கு பொதுமக்களிடமிருந்து பலன் கிடைத்தது” என்றார் நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் பிரகாஷ்.

தமிழக முதல்வருக்கு பாராட்டு...

கும்பகோணத்தில் நகராட்சி சார்பில் மகாமகத்தையொட்டி ரூ.47.69 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து நேற்று நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மிகச்சிறப்பான ஏற்பாடுகள்...

கடந்த 3 மகாமகப் பெருவிழாக்களில் பங்கேற்று புனித நீராடிய சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறும்போது, “எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நான் கடந்த 6 நாட்களாக இங்கு தங்கி தினமும் புனித நீராடிச் செல்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்.

சிலிர்த்த பிரான்ஸ் பெண்மணி...

மகாமக விழாவுக்கென பிரான்ஸ் நாட்டிலிருந்து 6 பேர் கொண்ட குழுவினர் கும்பகோணத்துக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆறு ஆகியவற்றில் நீராடினர்.

இவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த பிரான்ஸ் பெண்மணி இசபெல்லா மோரி ‘தி இந்து’விடம் கூறியது: 18-வது முறையாக இந்தியாவுக்கு வருகிறேன். வட மாநிலங்களில் நடைபெறும் கும்பமேளா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். மகாமக விழா தொடர்பாக அறிந்ததும், கடந்த 2 ஆண்டுகளாக அதைப்பற்றிய விவரங்களை அறிந்துகொண்டேன். இதில் ஆர்வம்கொண்ட 5 பேர் என்னுடன் இங்கு வந்துள்ளனர். இந்த குளத்தை மேலிருந்து பார்த்தபோது குளத்துக்குள் மக்கள் ஆறு ஓடுவது போலிருந்தது. இங்கு நிறைய சக்தி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன். இந்து என்பது மதமல்ல, அது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்பதை உணர்ந்துள்ளேன். வாழ்க்கைத் தத்துவம் இதில்தான் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது” என்று ஆச்சரியம் அகலாத விழிகளுடன் தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

கூட்டத்துக்கு பயந்து மறுநாள்...

சென்னையிலிருந்து தனது தாய், தந்தை, உறவினர்களுடன் தீர்த்தவாரிக்கு மறுநாளான நேற்று மகாமகக் குளத்தில் நீராட வந்திருந்தார் சுபா. இவர் கூறியபோது, “மகாமக விழா தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் தினமும் செய்தித்தாள்களில் வருவதைப் பார்த்தோம். தீர்த்தவாரி வரை கூட்டமாக இருக்கும் என்பதால்தான் விழா முடிந்தவுடன் வந்தோம். திருப்தியாக நீராடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

ராஜஸ்தான் புல்லாங்குழல்...

மகாமகப் பெருவிழாவுக்காக ராஜஸ்தானிலிருந்து புல்லாங்குழல் வியாபாரிகள் 100 பேர் கும்பகோணம் வந்தனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தங்கிய அவர்கள் நாளொன்றுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை புல்லாங்குழல் மற்றும் பொம்மைகளை விற்பனை செய்தனர். “கும்பகோணம் மகாமகத்துக்கு நாங்கள் இவ்வளவு பேர் வந்தது இதுதான் முதல்முறை. மனநிறைவு தரும் விதமாக விற்பனை நடைபெற்றது” புல்லாங்குழல் வியாபாரி ஷிவ்குமார்.

மகாமகத்துக்காக வந்த சார் ஆட்சியர்

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 1984-ம் ஆண்டுக்குப் பிறகு சார் ஆட்சியர் அந்தஸ்தில் ஐஏஎஸ் அதிகாரியான மந்திரிகோவிந்தராவை தமிழக அரசு கும்பகோணத்துக்கு பணிநிமித்தமாக அனுப்பியது. 2 ஆண்டுகளாகப் பணியாற்றி, மகாமக விழாவின் அனைத்து பணிகளையும், அதிகாரிகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட சார் ஆட்சியரை சக அதிகாரிகள் பாராட்டினர்.

அறைகளுக்கு 5 மடங்கு வாடகை; உணவகங்களில் விருப்பம்போல விலை

மகாமகத்தையொட்டி கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்த பெரும்பாலான தனியார் லாட்ஜ்கள், ரிசார்ட்கள், சர்வீஸ் அபார்ட்மென்ட்கள், ஹெரிடேஜ் குடில்களில் வழக்கத்தை விட 5 மடங்குக்கு மேல் அறைகளுக்கு வாடகை வசூலிக்கப்பட்டது. இதேபோல, சில உணவகங்கள், டீ கடைகள், குளிர்பான கடைகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி சாப்பாடு ரூ.100, ஊத்தப்பம், தோசை ரூ.50, கலவை சாதம் ரூ.50, டீ ரூ.10-க்கு விற்கப்பட்டன.

பால், சமையல் பொருட்களை நகருக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதால் விலையை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்றனர் உணவக உரிமையாளர்களில் சிலர். மனசாட்சியுள்ள பலர், உரிய விலைக்கே விற்பனை செய்தனர். அதேநேரத்தில், சாலையோரங்களில் ரூ.20 விலையுள்ள குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது பக்தர்களுக்கு ஆறுதல் அளித்தது.

‘108’-ன் சிறப்பான சேவை...

புனித நீராட வந்தபோது மயக்கமடைந்தவர்கள், இதய வலியால் பாதிக்கப்பட்டவர்கள் என கடந்த 10 நாட்களில் 1,078 பேரை 108 இலவச சேவை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காப்பாற்றி, முதலுதவி அளித்து, மருத்துவமனைகளில் சேர்த்தனர். 34 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 10 இருசக்கர அவசர சிகிச்சை வாகனங்களுடன் 200 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இதற்கென கும்பகோணத்தில் தனியாக கால் சென்டர் அமைக்கப்பட்டு, இந்த பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றன.

சிறப்பான தூய்மைப் பணி...

கும்பகோணம் நகரம் முழுவதும் சேரும் குப்பைகளை அகற்றுதல், ஆயிரக்கணக்கில் அமைக்கப்பட்டிருந்த கழிவறைகளைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பெருமை தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து வந்திருந்த 1,800 துப்புரவுப் பணியாளர்களையே சேரும். இவர்களது அயராத பணியால் தான் கும்பகோணம் நகரம் ஏறத்தாழ அரை கோடி பேர் வந்து சென்ற பிறகும் தூய்மையாகவே காட்சியளித்தது.

மதுரை மாநகராட்சியிலிருந்து துப்புரவுப் பணிக்காக வந்து 5 நாட்கள் கும்பகோணத்தில் தங்கியிருந்து பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் சுப்பையன், ரவி, பொன்னுசாமி ஆகியோர் கூறியபோது, “நாங்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு தூய்மைப் பணிக்காகச் சென்று தங்கிப் பணியாற்றினோம். ஆனால், கும்பகோணத்தில் சாமி கும்பிட வந்தவர்களுக்காக பணியாற்றியது எங்க மனசுக்கு சந்தோஷமாக இருந்தது” என்றனர்.

‘கும்பகோணம் - ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க வேண்டும்’

குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணா ‘தி இந்து’விடம் கூறியது: கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்துக்கு புதிய ரயில் வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

மகாமகப் பெருவிழாவையொட்டி நடத்தப்பட்ட துறவியர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக பிரதமர் மோடியை சந்தித்த போதும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவி டமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை அமைந்தால், ஜெயங் கொண்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமையும்போது இது மிகப்பெரிய பயன்பாடு கொண்டதாக இருக்கும். இதன் மூலம் சென்னைக்கு 40, திருப்பதிக்கு 60, பெங்களூருவுக்கு 100 கிலோ மீட்டர் பயண தூரம் குறையும்.

கும்பகோணத்தை பாரம்பரிய நகரமாக அறிவிப்பதற்கான நடவடிக் கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளை அதிகப்படுத்தவும், கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மகாமகப் பெருவிழாவையொட்டி நடத்தப்பட்ட துறவியர் மாநாடு சிறப்பாக இருந்தது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x