Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியீடு

சென்னை

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, ஆக. 24-ம் தேதி நிறைவடைந்தது.

மொத்தம் ஒரு லட்சத்து 74ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களைப் பதிவேற்றவும் நாளை (ஆக. 27) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 50 உதவி மையங்களில் நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்கு தகுதிபெறும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் செப். 4-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

ரேண்டம் எண் என்றால் என்ன?

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்ட கட்-ஆஃப், மாணவர்களுக்குச் சமமாகஇருந்தால், முதலில் கணித மதிப்பெண்ணும், 2-வதாக இயற்பியல் மதிப்பெண்ணும், 3-வதாக விருப்ப பாடத்தின் மதிப்பெண்ணும் கணக்கீடு செய்யப்படும்.

இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். 12-ம் வகுப்பின் மொத்த மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், 10-ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சமமாக இருந்தால், பிறந்த தேதி கணக்கிடப்படும். மேற்கண்ட அனைத்து வழிமுறைகளும் சமமாக இருந்தால் மட்டுமே ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும்.

அதன்படி, ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும். ரேண்டம் எண்ணின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், விருப்பப் பாடம் மற்றும் 10-ம் வகுப்பு மொத்த மதிப்பெண்ணைக் கணக்கீடு செய்யும் முடிவு நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x