Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

குடியிருப்பு நலச்சங்கங்களுடன் இணைந்து சென்னையில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்க குடியிருப்பு நலச்சங்கங்களுடன் இணைந்து சுமார் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் நீண்ட நாட்களுக்கு பயனுள்ளதாகவும், மண்ணின் தன்மை, கிடைக்கும் தண்ணீரின் தரம், சாலைகள் மற்றும் தெருக்களின் அகலத்துக்கு ஏற்றாற்போல் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

பசுமை பரப்பளவை அதிகரிக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும் அவற்றை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது.

இதை தொடர்ந்து, குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகளின் மூலம் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகளும் ஆர்வமுடன் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், தனியார் நிறுவனத்தினர் இணைந்து இதுவரை சுமார் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். ஏராளமானோர் ஆர்வமுடன் முன்வருகின்றனர். எவவே, சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து பசுமை பரப்பை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x